சென்னை: 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் பயணம் மேற்கொள்வதற்கான டிக்கெட்டை 120 நாட்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையை இந்திய ரயில்வே பின்பற்றி வருகிறது.இந்நிலையில் ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 2 மாதங்களாக குறைக்கப்படும் என சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இனி 60 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து கொள்ளமுடியும்.
இந்த டிக்கெட் முன்பதிவு கால மாற்றம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால் தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் போன்ற குறிப்பிட்ட பகல் நேர விரைவு ரயில்களுக்கான முன்பதிவில் எந்தவித மாற்றமும் இருக்காது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு காலம் 365 நாட்கள் என்பதிலும் எந்த மாற்றமும் இல்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: 60 நாட்கள் முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதன் மூலம் அதிகளவிலான பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியும். ஒரே நபர் அதிகப்படியான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற மோசடிகள் தடுக்கப்படும். முன்பதிவில்லா பெட்டிகளுக்கான விதிகளில் மாற்றம் ஏதுமில்லை.
இவ்வாறு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post 60 நாட்களாக குறைக்கப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் அமலானது: ரயில்வே நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.