×

தனுசுராசிப் பணியாள் முதலாளிக்கு வரப்பிரசாதம்

குரு ராசியான தனுசுராசியில் பிறந்தவர்கள் புதிய புதிய தொழில்நுட்பங்களை விரைவில் கற்றுக்கொண்டு உற்சாகமாகவும், அலுப்பு சலிப்பின்றியும் தொடர்ந்து வேலை பார்ப்பார்கள். தனுசுராசிப் பணியாளைக் கொண்ட முதலாளிகள், இவர்களைக் கொண்டு அதிக லாபம் பார்க்கலாம். ஆனால், திடீரென்று இவர்கள் முதலாளிகளையே விமர்சிப்பார்கள். அவர்களின் கருத்துக்களை முட்டாள் தனமானவை என்றும் தன்னிடம் கேட்டிருந்தால், தான் இன்னும் பயனுள்ள, லாபம் தருகின்ற வகையில் ஐடியா கொடுத்திருக்க முடியும் என்றும் சொல்வார்கள். இவர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் இவர்களைத் தொடர்ந்து பணியில் அமர்த்திக் கொள்ளும் முதலாளிகள் நிச்சயம் நல்ல லாபம் பார்க்கமுடியும்.

நேர்மை, உண்மை

தனுசுராசிப் பணியாளுக்கு வாய் கொஞ்சம் நீளம். ஆனால், வேலைத் திறன் அதிகம். பணியிடத்தில் இருந்து தொடர்ந்து வேலை செய்வதில் ஆர்வம் காட்டுவார்களே தவிர, அடிக்கடி வெளியே சென்று டீ, காபி குடிப்பது, அரட்டை அடிப்பது, பொழுதைப் போக்குவது, ஊர் சுற்றுவது என்பதில் இவர்களுக்கு ஆர்வம் இருக்காது. வேலையை முடிக்காமல் வீட்டுக்குக் கிளம்பமாட்டார்கள்.

உற்சாகம், ஊக்கம்

தனுசு ராசி பணியாள், வேலை பார்க்கும் போது உற்சாகமாகவும் சிரித்த முகமாகவும் இருப்பார்கள். எப்போதும் பாசிட்டிவான எண்ணங்களுடன் இந்த நிறுவனம் இன்னும் பல உயரங்களை தொடும் என்ற ஆக்கபூர்வமான சிந்தனையுடன் இருக்கின்ற இவர்களை சூப்பர்வைசர் அல்லது ஓவர்சீயர், மேனேஜர் ஆகிய பதவிகளில் அமர்த்தினால் மற்ற பணியாளர்களோடு இணைந்து இணக்கமாகி அவர்களிடம் அதிகமாக வேலையை வாங்கி விடுவார்கள். இவர்களுக்கு வேலை செய்யவும் தெரியும் வேலை வாங்கவும் தெரியும்.

தற்பெருமை

தனுசு ராசி பணியாளிடம் உள்ள ஒரு ஆகாத பழக்கம் என்னவென்றால், தற்பெருமை. தன்னால் மட்டுமே தன் ஒருவனால் மட்டுமே எதுவும் முடியும் என்ற அகம்பாவம் அதிகம். தன்னுடைய வேலைத்திறனின் மீது நம்பிக்கை வைத்து இவர்கள் ஏராளமான வேலைகளைச் செய்ய ஒப்புக்கொள்வார்கள். அவற்றைச் செய்ய நேரமில்லாமல் உணவு, ஓய்வு இடைவேளையின்றித் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பார்கள். தான் மிகப்பெரிய வேலைக்காரன் என்று நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்வார்கள். இவர்களால் வேலை செய்யாமல் சும்மா உட்கார்ந்து அலுவலகத்தில் அரட்டை அடிக்கவே முடியாது. வொர்க்ஹாலிக் (workaholic) என்று சொல்லலாம்.

முன்ஜென்ம புண்ணியம் அதிகம்

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு ராசி என்பதால், குருவின் அருள் அல்லது முன் ஜென்ம புண்ணியம், பெற்றோர் மற்றும் முன்னோர்களின் அருள் நிறைய இருக்கும். இதனால் இவர்களுக்கு ஒரு வேலை போனாலும் மறுவேலை அதைவிட சிறப்பான சம்பளத்துடன் கிடைக்கும். அந்த வேலையையும் ஒரு நாள் தொலைத்துவிட்டு, சில காலம் வேலை கிடைக்காமல் தவித்துப் போய் இருந்துவிட்டுப் பின்பு நல்ல வேலையில் அமர்வார்கள். சில சமயம் வேலை போய்விடுமோ என்ற ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டு தெய்வ அருளால் வேலையைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

திடீர் அதிர்ஷ்டம்

தனுசுராசிப் பணியாளுக்கு முன்னோர் அருளால் அல்லது குரு அருளால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அமையும். 15,000 மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர் திடீரென்று அமெரிக்காவுக்கு மாதம் 15 லட்சம் சம்பளத்துக்குப் போய்விடுவார். அவரே தன் வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார். அப்படி அவருக்கு ஒரு ஆசையும் இருந்திருக்காது. தேசியம், ஊர்ப் பாசம் மிகுந்தவர். அமெரிக்கா போக வேண்டும் என்று யாராவது ஒருவர் இவரை அழைத்து `நீ அப்ளை பண்ணு உனக்கு கிடைக்கும்’ என்று சொல்வார் இவரும் நம்பிக்கை இல்லாமல் பெரியவர் சொல்கிறாரே என்று அப்ளை செய்வார். ஆனால், இவருக்கு உடனே கிடைத்துவிடும். இப்படி அதிர்ஷ்ட வாய்ப்புகள் உள்ளவர்கள் தனுசு ராசிக்காரர்கள்.

`ஒன் ட்டு ஒன் டீலிங்’ நல்லது

மேலதிகாரி, தனுசுராசி பணியாளுடன் எப்போதும் தனியாக பேச வேண்டும். நான்கு பேருக்கு மத்தியில் அவர்களைப் பேச விட்டால் அவர்கள் கூசாமல் `நீங்கள் சொல்வது தப்பு சார். அது நடக்காது. அதனால் கம்பெனிக்கு நஷ்டம்தான் சார் வரும்’ என்று எல்லோர் முன்னிலையிலும் முகத்தில் அடித்தால் போல் சொல்லிவிடுவர். தனுசு ராசி பணியாள் குருத்துவம் மிக்கவர்கள். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகம்பாவம் கொண்டவர்கள். தன்னுடைய கருத்தில் உறுதியான நம்பிக்கை இருப்பதால், எங்கும் வெளியிடத் தயங்க மாட்டார்கள். எனவே இவர்களோடு முதலாளிகள் 1 to 1 டிஸ்கஷன் வைப்பது அவருக்கு மரியாதை, கம்பெனிக்கு லாபம். நேர்மையாக உழைக்கும் நிறைய நேரமும் உழைக்கின்ற தனுசு ராசி பணியாள் முதலாளிக்கு ஒரு வரப்பிரசாதமே!

The post தனுசுராசிப் பணியாள் முதலாளிக்கு வரப்பிரசாதம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தேவ ரகசியம் என்றால் என்ன?