×

சுவை, தரம் காரணமாக வெளிநாடுகளில் கடும் கிராக்கி உருளைக்கிழங்கு ஏற்றுமதி அதிகரிப்பு

Potato, Mettuplayamமேட்டுப்பாளையம் : ஊட்டி, குன்னூர், கோத்தகரி, கூடலூர் உள்ளிட்ட நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளைவிக்கப்படும் கேரட், முள்ளங்கி, நூல்கோல், டர்னீப், பீட்ரூட், உருளைக்கிழங்கு, வெள்ளைப்பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகளின் (இங்கிலீஷ் வெஜிடபிள்ஸ்) முக்கிய வியாபார சந்தையாக மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மலை காய்கறிகள் விற்பனைக்காக மொத்த விற்பனை மையங்களுக்கு கொண்டுவரப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் விளைபொருட்கள் அனைத்துமே தரமானதாகவும், நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமலும் இருப்பதால் பொதுமக்களால் அதிகமாக விரும்பி வாங்கப்படுகின்றன. குறிப்பாக மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள மொத்த விற்பனை சந்தைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் மலை காய்கறிகள் விற்பனைக்காக விவசாயிகளால் கொண்டு வரப்படுகின்றன.

ஊட்டி வெள்ளை பூண்டுக்கு அதிக மருத்துவ குணமும், நல்ல காரமும் உடையதால் பொதுமக்களால் அதிகளவில் விரும்பி வாங்கிச்செல்லப்படுகின்றன.ஊட்டி வெள்ளைப்பூண்டுக்கு எந்த அளவிற்கு கிராக்கி உள்ளதோ அதே அளவிற்கு மவுசு அதிகம் உள்ளதாக கருதப்படுவது உருளைக்கிழங்கு. மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நூற்றுக்கணக்கான உருளைக்கிழங்கு மண்டிகள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விளையும் உருளைக்கிழங்குகள் விவசாயிகளால் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகின்றன. மேலும் குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகளில் நாள்தோறும் உருளைக்கிழங்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

வெளிமாநில உருளைக்கிழங்குகளை காட்டிலும் நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகளுக்கு எப்போதுமே கடும் கிராக்கி வெளிநாடுகளில் இருந்து வருகிறது. ஏனென்றால் நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்குகள் தரமானதாகவும், சுவையானதாகவும், நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருப்பதால் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வெளிமாநில உருளைக்கிழங்குகளை நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது.

சுவையும் எதிர்பார்க்கும் அளவிற்கு இருக்காது. எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது. சிப்ஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களை தயார் செய்தாலும் போதுமான மொறுமொறுப்பு இருக்காது. ஆனால், ஊட்டி உருளைக்கிழங்குகள் தரமானதாகவும், சுவையானதாகவும் இருக்கும். நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாத தன்மை உடையது.

சிப்ஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களை தயார் செய்தால் மொறுமொறுப்பாக இருப்பதோடு சுவையும் அதிகமாக இருக்கும். வெளிமாநில உருளைக்கிழங்குகளுக்கும், ஊட்டி உருளைக்கிழங்குகளுக்குமான விலையில் பெரிய அளவிலான வித்தியாசம் இருந்து வருகிறது. இதனால் ஊட்டி உருளைக்கிழங்குகளுக்கு எப்போதுமே மவுசு ஜாஸ்தி. அதனால்தான் ஊட்டி உருளைக்கிழங்குகள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளில் இருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு நாள்தோறும் 50 டன்னுக்கும் அதிகமான உருளைக்கிழங்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் உருளைக்கிழங்குகள் தூத்துக்குடி சென்று அங்கிருந்து கப்பல் மூலமாக இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதேபோல் சிங்கப்பூர், மலேசியா, அந்தமானுக்கும் நாள்தோறும் 10 டன்னுக்கும் மேல் ஊட்டி உருளைக்கிழங்குகள் லாரிகள் மூலமாக தூத்துக்குடி, கொச்சின் துறைமுகங்களுக்கு சென்று அங்கிருந்து கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.

தற்போது வெளிநாடுகளுக்கு உருளைக்கிழங்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது தொடர்பாக மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டி உரிமையாளர் பாபு கூறுகையில், ‘‘கடந்த ஆண்டைக்காட்டிலும் நடப்பு ஆண்டில் உருளைக்கிழங்கு ஏற்றுமதி 10 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போது நீலகிரி மாவட்டத்தில் விளைச்சல் அதிகமாக இருப்பதால் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் இலங்கை, மாலத்தீவு, சிங்கப்பூர், மலேசியாவில் ஊட்டி உருளைக்கிழங்குக்கு அதிக கிராக்கி உள்ளது. எனவே இங்கிருந்து உருளைக்கிழங்கு ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. வரும் காலங்களிலும் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்’’ என்று கூறினார்.

விவசாயிகளின் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் மொத்த விற்பனை மையத்திற்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து வியாபாரிகள் மூலமாக ஏல முறையில் எடுக்கப்படுகிறது. பின்னர், சில்லரை விற்பனைக்கு அவர்கள் கொண்டு செல்கின்றனர். நேற்றைய நிலவரப்படி ஊட்டி உருளைக்கிழங்கு 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை குறைந்தபட்சமாக ரூ.1800க்கும், அதிகபட்சமாக ரூ.2300க்கும் விற்பனையாகி வருகிறது.

நீலகிரி விவசாயிகள் ஏற்கனவே ஜிஎஸ்டியால் கடும் நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில் தற்போது ரூ.50 லட்சத்திற்கும் மேல் விற்பனைக்காக கொண்டு வரும் விவசாயிகள் கூடுதலாக 0.1% டிடிஎஸ், டிசிஎஸ் செலுத்த வேண்டியுள்ளது. விவசாயிகளின் வங்கி பரிவர்த்தனையில் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால் இந்த டிடிஎஸ், டிசிஎஸ் செலுத்த வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் விலையையும் அதிகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

The post சுவை, தரம் காரணமாக வெளிநாடுகளில் கடும் கிராக்கி உருளைக்கிழங்கு ஏற்றுமதி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Highlands ,Neelgiri district ,Toppalayam ,Dinakaran ,
× RELATED கிறிஸ்துமஸ், புத்தாண்டு...