நியூயார்க்: அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக நியூயார்க் பள்ளிகளுக்கு நாளை தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் தங்கள் வீடுகளில் தீபாவளி கொண்டாடுகிறார்கள். இதே போல் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அக்.28 அன்று அதிபர் பைடன் தீபாவளி கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் நியூயார்க் நகரில் முதல்முறையாக தீபாவளியை முன்னிட்டு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இந்து சமயத் தலைவர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த அதிகாரிகள் பல ஆண்டுகளாக வைத்த கோரிக்கையை ஏற்று நியூயார்க் மாநகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தீபாவளியை முன்னிட்டு நாளை விடுமுறை அறிவிப்பு செய்யப்பட்டு இருப்பதாக நியூயார்க் மேயர் எரிக் ஆடமின் அலுவலகத்தில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான துணை ஆணையர் திலிப் சவுகான் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,’ நியூயார்க் மாநகரில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்து குழந்தைகள் பள்ளிக்கு செல்வதா அல்லது பண்டிகை கொண்டாடுவதா என்ற குழப்பத்தில் இருப்பது வாடிக்கை. தற்போது தீபாவளிக்கு அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாக இருப்பதால், மாணவர்கள் இனி தீபாவளியைக் கொண்டாடலாம். பள்ளிக்குச் செல்வதை தேர்வு செய்ய வேண்டியதில்லை.
நியூயார்க் நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 1ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு வாய்ந்தது. நியூயார்க் நகரில் 11 லட்சம் மாணவர்கள் படித்துவருகிறார்கள். நியூயார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்த தீபாவளி விடுமுறையை அறிவித்துள்ளார். எனவே, நாங்கள் அனைவரும் அவருக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்’ என்றார்.
The post அமெரிக்கா வரலாற்றில் முதல் முறையாக நியூயார்க் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை appeared first on Dinakaran.