பெங்களூரு: கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ரேணுகாசாமி கடந்த ஜூன் 8 ம் தேதி பெங்களூருவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முன்னணி கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை பவித்ரகவுடா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். மற்ற கைதிகள் வெவ்வேறு சிறையில் உள்ளனர்.
இதனிடையில் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரகவுடா ஆகியோர் பெங்களூரு 57வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தர்ஷன் கடந்த 16ம் தேதி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு மீது நீதிபதி விஷ்வஜித்ஷெட்டி முன்னிலையில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக விசாரணை நடந்தது.
இதை தொடர்ந்து நீதிபதி நேற்று வழங்கிய தீர்ப்பில், மனுதாரரின் உடல் நலனை கருத்தில் கொண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு வசதியாக 6 வாரம் காலம் இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்கிறேன். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் உள்பட பல நிபந்தனைகளை விதித்தார். 166 நாட்களாக சிறையில் இருந்த தர்ஷன் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை வரவேற்க சிறை முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
The post கொலை வழக்கில் கைதான கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன்: கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.