- முத்துராமலிங்க தேவர்
- Gurupuja
- ராமநாதபுரம்
- Gurupuja
- ஜெயந்தி
- பசம்பன் கிராமம்
- கமுதி, ராமநாதபுரம் மாவட்டம்
- முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை
ராமநாதபுரம்: முத்துராமலிங்கத்தேவர் குருபூஜையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே, பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் 117வது ஜெயந்தி மற்றும் 62வது குருபூஜை விழா கடந்த 28ம் தேதி காலை ஆன்மிக விழாவாக தொடங்கியது. 2ம் நாளில் யாகசாலை பூஜை, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் அரசியல் விழா நடந்தது. ஏராளமானோர் பால்குடம், முளைப்பாரி, காவடி எடுத்து வந்து தேவர் நினைவாலயத்தில் செலுத்தினர்.
மூன்றாம் நாளான நேற்று, தேவர் நினைவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், மதிமுக சார்பில் துரை வைகோ, பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன், எச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் தலைவர் செல்வப்பெருந்தகை, திருநாவுக்கரசர்,
தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாமக சார்பில் ஜி.கே.மணி, நாம்தமிழர் கட்சி சார்பில் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சினர், முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிறுவனத் தலைவர் கருணாஸ் மற்றும் சமுதாயத் தலைவர்கள் தேவர் நினைவாலயத்தில் மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பசும்பொன்னுக்கு நேற்று 900க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* 2026 தேர்தலில்அதிமுக வெற்றி பெறாது: ஓ.பன்னீர்செல்வம் உறுதி
தேவர் நினைவாலயத்தில் மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தேசியம் ஒரு கண்ணாகவும், தெய்வீகம் ஒரு கண்ணாகவும் போற்றி வாழ்ந்தவர் தேவர். அதிமுக ஒன்றிணையாமல் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற இயலாது. நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை தீர்மானம் இயற்றி தேர்ந்தெடுத்த பிறகு, வேறு யாரையும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2026 தேர்தல் நிலைப்பாடு குறித்து அப்போது தெரிவிப்பேன். நடிகர் விஜய் நிலைப்பாடு, செயல்பாடு எப்படி போகிறதோ, அதனை பார்த்து தான் கருத்து தெரிவிக்க முடியும்’’ என்றார்.
* இன்னும் உழைக்கணும்… விஜயகாந்த் மகன் விஜய்க்கு அட்வைஸ்
தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கூறுகையில், ‘‘நடிகர் விஜய் மாநாடு நடத்தியதற்கு வாழ்த்துக்கள். விஜயகாந்த் மறைவிற்குப் பின்பு தேமுதிக நடத்திய முதல் மாநாடு மற்றும் அதற்கு குவிந்த தொண்டர்கள் குறித்து, ஒவ்வொரு நாளும் பேசிக் கொண்டு தான் வருகிறோம். அந்த வகையிலேயே தவெக மாநாடு நடந்த அன்றும், நினைவு கூரப்பட்டது. விஜய் கட்சி துவங்கி முதல் மாநாடு மட்டுமே முடிந்துள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்துள்ளார். அவர் இன்னும் உழைக்க வேண்டியது நிறைய உள்ளது’’ என்றார்.
* சீமானை முற்றுகையிட்டு ஒழிக கோஷம்
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதியம் 1 மணியளவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து விட்டு புறப்பட்டு செல்ல முயன்றார். அப்போது, முக்குலத்தோர் அமைப்பை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ‘`பாண்டியர்கள் என்றால் தேவர் சமுதாயத்தினர்தான். இதை மாற்றி கூறக்கூடாது’’ என முழக்கமிட்டனர். மேலும், சீமானுக்கு எதிராக ஒழிக கோஷம் முழக்கமிட்டபடி அவர் செல்லும் பாதையை வழிமறித்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்தனர். பின்னர், சீமானை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
* எடப்பாடியின் கனவு பலிக்காது: டிடிவி.திட்டவட்டம்
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு டிடிவி.தினகரன் கூறுகையில், ‘‘அனைத்து தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கைப்படி, மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டப்பட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அமமுக சார்பில் இதுதொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். பசும்பொன்னில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் நன்றாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் முதல்வராக பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது’’ என்றார்.
The post முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.