அரக்கோணம்: அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 100க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், வட மாவட்டங்கள் மற்றும் தென் மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம்-சென்னை, சென்னை-அரக்கோணம், திருத்தணி இடையே 100க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 6 மணியளவில் சென்னைக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில் நீண்ட நேரமாகியும் இயக்கப்படவில்லை. அடுத்தடுத்து இயக்க வேண்டிய மின்சார ரயில்களும் இயக்கவில்லை. ரயிலில் இருந்த பயணிகள், ஏன் ரயில் இயக்கப்படவில்லை என்ற காரணம் தெரியாமல் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் உள்ள சிக்னலில் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.
இதனால் 3, 4 மற்றும் 5 வது பிளாட்பாரங்கள் வழியாக ரயில்கள் இயக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டது. அதே நேரத்தில் 1 மற்றும் 2வது பிளாட்பாரம் வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டது. நீண்ட நேரமாக காத்திருந்தும் ரயில்கள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகள், சிக்னல் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. சிறிது நேரத்தில் பணிகள் முடிவடைந்துவிடும். உடனே ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் பயணிகள், மாற்றுப்பாதையில் மின்சார ரயில்களை இயக்க வேண்டும். இதேபோன்று, சிக்னல் கோளாறு என அடிக்கடி ரயிலை நிறுத்தி விடுகிறீர்கள் எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ரயில்வே போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் சென்று பணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதையடுத்து, 7 மணியளவில் சிக்னல் பழுது சரிசெய்யப்பட்டது. இதனால் 1 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு புறநகர் மின்சார ரயில்கள் அடுத்தடுத்து இயக்கப்பட்டது. இதனால், வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக ரயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
The post அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கோளாறால் மின்சார ரயில்கள் நிறுத்தம்: அதிகாரியை பயணிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.