×
Saravana Stores

மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்கள் கூட்டம்: இலங்கை அதிபர் ஆலோசனை, விரைவில் பேச்சுவார்த்தை?

ராமேஸ்வரம்: மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்கள் கூட்டத்தை நடத்த இலங்கை அதிபர் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை பாக் ஜலசந்தி கடலில் தொடர்ந்து கைது செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை இலங்கை கடற்படையினர் 62 தமிழக மீன்பிடி படகுகளையும், 462 மீனவர்களையும் கைது செய்துள்ளனர்.

மீனவர்கள் மீது வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அந்நாட்டு நீதிமன்றங்களில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதில் இதுவரை 88 மீனவர்களுக்கு 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை தண்டனை வழங்கப்பட்டு இலங்கை சிறைகளில் கைதிகளாக உள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் 2018 ஜன. 24ல் வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி முதல் முறையாக சிறைபிடிக்கப்படும் மீனவர்கள் மீது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கின்றனர். பின்னர் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர்.

இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டால், 6 மாத சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தது. படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன. ஆனால், கடந்த 10 மாதங்களாக மீனவர்கள், விசைப்படகு ஓட்டுநர்கள் முதல் முறையாக சிறைபிடிக்கப்பட்டாலே சிறை தண்டனை வழங்கப்படுகிறது.

படகுகளை நாட்டுடமையாக்குதல், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் சிறை தண்டனை விதிப்பது அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது என இலங்கை நீதிமன்றங்கள் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்தி வருகின்றன. இந்த வெளிநாட்டு மீன்பிடிச் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், மீனவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும், பறிமுதல் படகுகள், மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

மேலும், தமிழக மீனவப் பிரதிநிதிகள் டெல்லி சென்று ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தவும் செய்தனர். இதற்கிடையே, கடந்த 5 நாளுக்கு முன் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, அதிபர் அநுரகுமார திசாநாயக்கவின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதுதொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த சந்திப்பில், பாக் ஜலசந்தி கடற்பரப்பில் நிலவும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்னைகளை தீர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்தியா, இலங்கை இரு நாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்திய அரசு சார்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவு செய்வதை விரைவுபடுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது’’ என் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியா – இலங்கை இருநாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்னைகளுக்கு தீர்வு காண இருநாட்டு மீனவ சங்கங்களின் கூட்டத்தை இலங்கை அரசு விரைந்து நடத்த வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இது இருநாட்டு மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான தீர்வை ஏற்படுத்தும் வகையில் அமையும் எனவும் மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

* ‘ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’
ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜ் கூறும்போது, ‘‘தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதால், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முடங்கும் நிலையில் உள்ளது. ஒன்றிய அரசு இதனை துரிதபடுத்தி இருநாட்டு மீனவர்கள் சங்க கூட்டத்தை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். முன்னதாக இருநாட்டு சிறையில் உள்ள மீனவர்கள் அனைவரும் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டால், சுமூக பேச்சுவார்த்தைக்கு துவக்கமாக அமையும்’’ என்றார்.

* இந்தாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை இலங்கை கடற்படையினர் 62 தமிழக மீன்பிடி படகுகளையும், 462 மீனவர்களையும் கைது
செய்துள்ளனர்.

The post மீன்பிடி பிரச்னைக்கு தீர்வு காண இருநாட்டு மீனவர்கள் கூட்டம்: இலங்கை அதிபர் ஆலோசனை, விரைவில் பேச்சுவார்த்தை? appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Rameshwaram ,President ,Sri Lankan Navy ,Bak Strait Sea ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 16...