- திருச்செந்தூர்
- அமைச்சர் ஷேகர்பாபு
- சென்னை
- முதலமைச்சர்
- தமிழ்
- தமிழ்நாடு
- மு.கே ஸ்டாலின்
- கந்தசஷ்டி விழா
- அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி
- அமைச்சர்
- இந்து மதம்
- மத தொண்டு நிறுவனங்கள்
- திரு.
- கே ஷெக்கர்பாபு
- அருள்மிகு சுப்பிரமணியன்
- சுவாமி
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி பெருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நவம்பர் 2ம் தேதி தொடங்கி, நவம்பர் 7ம் தேதி சூரசம்ஹாரமும், 8ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளது. கந்த சஷ்டி விரதம் தொடங்கும் முதல் ஐந்து நாட்களுக்கு தினம் ஒரு லட்சம் பக்தர்களும், சூரசம்ஹார தினத்தன்று சுமார் ஆறு லட்சம் பக்தர்களும், திருக்கல்யாணத்திற்கு சுமார் இரண்டு லட்சம் பக்தர்களும் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவதால் அவர்களின் தேவைக்கேற்க வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 181 இடங்களில் சிசிடிவி கேமராக்களும், கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
விழா நாட்களில் சுமார் 2,000 க்கும் மேற்பட்ட காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் அவசர சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவதோடு ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்படுகிறது. சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் அவர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள 18 இடங்களில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் நிழல் கொட்டைகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அங்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை முழுமையாக நிறைவேற்றி தரப்படும். திருக்கோயில் வளாகத்திலுள்ள நிரந்தர கழிவறைகளுடன் 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.70 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்கள் மற்றும் மாற்றத்திறனாளிகள் விரைவாக தரிசனம் செய்திட சிறப்பு வழி அமைக்கப்பட உள்ளது. கந்த சஷ்டி திருவிழா போது பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு வழங்கிட முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.
பொது தரிசன வரிசையில் இந்தாண்டு Q Line Complex அமைக்கப்பட்டு அதில் இருக்கை வசதி, மின்விசிறி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சுழற்சி முறையில் திருக்கோயில் கடல் பாதுகாப்பு பணியாளர்களுடன் மீன்வளத்துறை பணியாளர்கள் இணைந்து பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீ விபத்துகளை தடுத்திடும் வகையில் தீயணைப்பு பணியாளர்களுடன் தீயணைப்பு துறை வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் கந்தசஷ்டி நிகழ்வுகளை அனைவரும் கண்டு களிக்கும் வகையில் பெரிய அளவிலான எல்.இ.டி, திரைகள் முக்கிய இடங்களில் அமைக்கப்படுகின்றன. விழா நாட்களில் திருக்கோயில் மற்றும் அதன் சுற்றுபுறங்களில் சுகாதாரம் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் சுமார் 400 தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்படும். திருக்கோயில் சார்ந்த பாதுகாப்பு பணியில் வெளிமுகமையின் மூலம் சுமார் 200 நபர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கவும், விரைவாக தரிசனம் மேற்கொள்ளவும், தேவையான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவத்துறை போன்ற அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றன. ஆகவே இந்தாண்டு கந்த சஷ்டி பெருவிழா கடந்தாண்டை போலவே வெகு சிறப்பாக பக்தர்கள் மனம் மகிழ்ச்சி அடையும் வகையில் சிறப்பாக அமையும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அவர்கள் தெரிவித்ததுள்ளார்.
The post திருச்செந்தூரில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் சேகர் பாபு ! appeared first on Dinakaran.