×
Saravana Stores

கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில் இயக்கம் : பூங்காநகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்காததால் பயணிகள் மீண்டும் அவதி

Velachery.Chennai Beach,park town*14 மாதங்களுக்கு பிறகும் ரயில்வே அலட்சியம்

சென்னை : கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கடற்கரை -எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணி காரணமாக கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை -வேளச்சேரி இடையே மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து 25 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டதால் ரயிலை தவறவிட்டால் அடுத்த ரயிலுக்கு 25 நிமிடம் காத்திருக்க வேண்டிய நிலைய ஏற்பட்டது.

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டபோது 7 மாதங்களில் பணிமுடிந்து இந்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என கூறப்பட்டது. பிறகு பணியில் தொய்வு காரணமாக ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு பறக்கும் ரயில் சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இரு மார்க்கமாகவும் 90 ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கி உள்ளதால் பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கடற்கரை – வேளச்சேரி வரை அதிகாலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி – கடற்கரை வரை அதிகாலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதேநேரம், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை, மீண்டும் தொடங்கியுள்ள நிலையிலும், பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் முழுமையாக நிறைவு பெறாததால் அங்கு மட்டும் மறு அறிவிப்பு வரும் வரை ரயில்கள் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது வேளச்சேரியில் இருந்து வரும் ரயில்களும், கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரயில்களும் பூங்கா நகர் ரயில் நிலையத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கா நகர் ரயில் நிலையம், வெளியூர் செல்லும் ரயில்கள் இயக்கப்படும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கான நிறுத்தமாக இருக்கும் நிலையில், அங்கு ரயில்கள் நிற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடம் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயணிகள் கோட்டை ரயில் நிலையம் சென்று மாறி வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பூங்கா நகர் ரயில் நிலையம் அரக்கோணம், தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்கு இணைப்பாக இருக்கிறது. இங்கு ரயில் நிற்காமல் கடற்கரை வரை இயக்கம் என்பது பயனுள்ளதாக இல்லை என்றனர் பயணிகள்.

The post கடற்கரை – வேளச்சேரி மின்சார ரயில் இயக்கம் : பூங்காநகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்காததால் பயணிகள் மீண்டும் அவதி appeared first on Dinakaran.

Tags : Beach ,Velachery ,Parknagar railway ,Chennai ,Coastal-Ellumpur ,Coastal ,Chindathiripet ,Avadi ,
× RELATED நாளை முதல் வழக்கம்போல் மீண்டும்...