புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரூ.12,580 கோடிக்கான வளர்ச்சித் திட்டப் பணிகளையும், நாடு முழுவதும் 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஒன்பதாவது ஆயுர்வேத தினம் மற்றும் இந்து மருத்துவ கடவுளான தன்வந்திரியின் பிறந்த தினத்தையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ திட்டப் பணிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
இதில், நாடு முழுவதும் உள்ள 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் குடும்ப வருமானத்தை பொருட்படுத்தாமல், ரூ.5 லட்சத்திற்கான இலவச மருத்துவ காப்பீடு வழங்கும் வகையிலான ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்தினார். இதன் மூலம் நாட்டில் உள்ள 4.5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள். இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு சிறப்பு காப்பீடு அட்டை வழங்கப்படும்.
இதுதவிர, டெல்லியில் உள்ள நாட்டின் முதல் அகில இந்திய ஆயுர்வேத இன்ஸ்டிடியூட்டின் 2ம் தொகுதியையும் மருந்து உற்பத்திக்கான ஆயுர்வேதிக் பார்மஸியையும், விளையாட்டு மருத்துவ பிரிவையும், மத்திய நூலகம், ஐடி மற்றும் ஸ்டார்ட்அப் இன்குபேஷன் மையம், 500 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவற்றை திறந்து வைத்தார். உத்தரகாண்ட், தெலங்கானா, ஆந்திரா உட்பட 11 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் மருத்துவ அணுகலை எளிதாக்கும் வகையில் டிரோன் சேவையை தொடங்கி வைத்தார். உத்தரகாண்ட் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர ஹெலிகாப்டர் மருத்துவ சேவையை மோடி தொடங்கி வைத்தார்.
கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு உயிர்காக்கும் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்காக யு-வின் இணையதளத்தை தொடங்கி வைத்தார். ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மத்தியப் பிரதேசத்தில் 5 நர்சிங் கல்லூரிகள் கட்டவும், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, மணிப்பூர், தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானில் 21 அவசரகால சிகிச்சை பிரிவுகள் கட்டவும் மோடி அடிக்கல் நாட்டினார்.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் இஎஸ்ஐ மருத்துவமனையைத் திறந்து வைத்த மோடி, அரியானாவில் பரிதாபாத், கர்நாடகாவின் பொம்மசந்திரா மற்றும் நரசாபூர், உத்தரப் பிரதேசத்தின் மீரட் மற்றும் ஆந்திராவின் அச்சுதாபுரம் ஆகிய இடங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் கட்ட அடிக்கல் நாட்டினார்.இதுதவிர, ரோஸ்கர் மேளாவில் ஒன்றிய அரசின் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 51,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது, அதிகபட்ச இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதே தனது அரசின் உறுதிப்பாடு என்றும், நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் வாய்ப்பளிக்கும் அமைப்பை அரசு ஏற்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் மோடி பேசினார்.
* டெல்லி, மேற்கு வங்கத்தின் முதியவர்கள் மன்னியுங்கள்
இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, ‘‘டெல்லி, மேற்கு வங்கத்தில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு என்னால் சேவை செய்ய முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வலிகள் மற்றும் துன்பங்களை நான் அறிவேன். ஆனால் என்னால் உங்களுக்கு உதவ முடியாததற்கு காரணம், டெல்லி, மேற்கு வங்க மாநில அரசுகள் தங்கள் அரசியல் நலனுக்காக இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை ஏற்காமல் இருக்கின்றன. ஆனாலும், மக்களவை தேர்தலில் அளித்த எனது இந்த வாக்குறுதியை மற்ற மாநிலங்களுக்கு நிறைவேற்றி இருக்கிறேன்’’ என்றார்.
* அயோத்தியில் வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி
அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் இந்த ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தீபாவளி கொண்டாடப்பட இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். திட்டப் பணிகள் தொடக்க விழாவில் பேசிய அவர், ‘‘ராமர் வீடு திரும்பிய பிறகு கொண்டாடப்படும் முதல் தீபாவளி இது. இம்முறை நாம் 14 ஆண்டுகள் அல்ல, 500 ஆண்டுகள் காத்திருந்திருக்கிறோம். அயோத்தியில் குழந்தை ராமர் பிறந்த இடத்தில் ஆயிரமாயிரம் விளக்குகளை ஏற்றி தீபாவளியை கொண்டாடுவோம்’’ என்றார்.
The post ரூ. 12,580 கோடி வளர்ச்சிப் பணிகள் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் அனைவருக்கும் இலவச காப்பீடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.