சென்னை: வெடிகுண்டு வழக்குகளில் பிடி வாரண்ட்டை அமல்படுத்தாமல் கால அவகாசம் கேட்ட 5 வழக்குகளில் கியூ பிராஞ்ச் ஐஜிக்கு ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்ற கட்டிடத்தின் 2வது மாடியில் 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உள்ளது.
இந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு வழக்குகள், நக்சலைட் தொடர்பான வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. தடா வழக்குகளுக்கான இந்த சிறப்புநீதிமன்றத்தில் கடந்த 1991ல் சென்னை கியூ பிரிவு போலீசாரால் தடா சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வெடிகுண்டு வழக்கு, 1990ல் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வெடிகுண்டு வழக்கு, சிவகங்கை கியூ பிரிவு போலீசாரால் தடா சட்டத்தின்கீழ் 1991ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு, திண்டுக்கல் கியூ பிரிவு போலீசாரால் கடந்த 1991ல் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வெடிகுண்டு வழக்கு, சென்னை கியூ பிரிவு போலீசாரால் கடந்த 1990ல் தடா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுமார் 32 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் பலருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த பிடிவாரண்டுகளை சம்மந்தப்பட்ட போலீசார் அமல்படுத்தவில்லை. இந்த வழக்குகள் 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிடி வாரண்டை அமல்படுத்த கால அவகாசம் கேட்டார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதி, 5 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்குமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல முறை அறிவுறுத்தியுள்ளன. ஆனால், 32 ஆண்டுகளுக்கும் மேல் நிலுவையில் உள்ள இந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நீதிமன்ற பிறப்பித்த உத்தரவையும் போலீசார் அமல்படுத்தவில்லை.
இது குறித்து டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பல முறை கடிதம் எழுதியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்த 5 வழக்குகளில் சம்மந்தப்பட்ட கியூ பிரிவு ஐஜிக்கு இந்த நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிற்கும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் என்று அடிப்படையில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் அபராதம் விதிக்கிறது. இந்த தொகையை சம்மந்தப்பட்ட ஐஜி நவம்பர் 29ம் தேதிக்குள் சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
The post பிடிவாரண்ட்டை அமல்படுத்தாத விவகாரம் கியூ பிராஞ்ச் ஐ.ஜிக்கு ரூ. 1.25 லட்சம் அபராதம்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.