கேரளா: சபரிமலையில் காலாவதியான 6 கோடியே 65 லட்சம் மதிப்பிலான அரவணை பிரசாதத்தை அழிக்கும் பணி தொடங்கியுள்ளது. பழனி என்றால் பஞ்சாமிருதம், திருப்பதி என்றால் லட்டு அப்படி சபரிமலை என்றால் அரவணை தான் பிரதான பிரசாதம். அதில் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருப்பதாக 2023ல் புகார் எழுந்தது.
அதனால் அரவணை பிரசாதத்திற்கு தடை விதிக்க கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஐயப்பா ஐசிஎஸ் அமைப்பு வழக்கு தொடர்ந்தது. சோதனைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பூச்சிக்கொல்லி மருந்து கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் குடோன்களில் 6 கோடியே 55 லட்சம் மதிப்பிலான 6.55 லட்சம் அரவணை பிரசாத டின்கள் தேக்கமடைந்தன. டன் கணக்கிலான பிரசாதத்தை சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாமல் அழிப்பது மிகப்பெரிய சவாலாக பார்க்கப்பட்டது. அதனால் நீண்ட ஆலோசனை, ஆய்வுகளுக்கு பிறகு அவற்றை அளிக்க தேவஸ்வம் போர்டு ஒப்பந்தம் கோரி இருந்தது.
ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் அரவணை பிரசாத டின்களை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மாளிகைபுரத்து அம்மன் கோயிலில் இருந்து அரவணை பிரசாத டின்கள் பம்பைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து ஏற்றுமானூரில் அரவணை பிரசாதத்தை உலர்த்தி பொடியாக்கி அவை இயற்கை உரமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை தொடங்குவதற்கு முன்பே அதாவது நவம்பர் முதல் வாரத்திலேயே இந்த பணிகளை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அரவணை தயாரிப்பு மற்றும் அதனை அழிப்பதற்காக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ரூ.7.80 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சர்ச்சையான அரவணை பிரசாதம்.. சபரிமலையில் காலாவதியான 6.65 கோடி பிரசாதத்தை அழிக்கும் பணி தொடக்கம்!! appeared first on Dinakaran.