சென்னை: வெற்று ஆரவாரமே வெற்றியாகி விடாது என்று த.வெ.க. மாநாடு குறித்து ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; விஜய் உரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் பல வினாக்களை எழுப்பியுள்ளன. விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் வெளிப்படுத்தியுள்ள கருத்துக்கள் பல வினாக்களை எழுப்பியுள்ளன. பல தலைவர்களை வழிகாட்டியாக அறிவித்த விஜய், காயிதே மில்லத், ஹைதர் அலி, திப்பு சுல்தான் பெயர்களை உரையில் குறிப்பிடவில்லை.
விஜயின் அந்நியப்படுத்தும் அணுகுமுறை பாசிச பா.ஜ.க.வின் அணுகுமுறை என்பதை அவர் உணர வேண்டும். திராவிட மாடல் ஆட்சியை விமர்சித்த விஜய், மக்களை பிளவுபடுத்தும் பாசிச பா.ஜ.க. ஆட்சியை வெளிப்படையாக விமர்சிக்காதது ஏன்?. முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து விஜய் அறிக்கை வெளியிட்டாரா?. மணிப்பூரில் தொடர்ந்து நடத்தப்படும் இனப்படுகொலை குறித்து விஜய் குரல் எழுப்பியுள்ளாரா?. அது பாசிசம் என்றால் இது பாயாசமா என்று கேட்டு கேலி செய்வது யாரை மகிழ்ச்சிப்படுத்த? என்று ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார்.
பெரும்பான்மை வாதத்தை தனது கோட்பாடாக கொண்டு பிளவுவாதத்தை இம்மண்ணில் நிலைநிறுத்துவது பாசிச பா.ஜ.க. மட்டுமே. வெற்றிகரமான நடிகராக இருந்தால் கட்சி தொடங்கி ஆட்சியை பிடித்து விடலாம் என்பது தமிழ்நாட்டின் நவீனகால மூடநம்பிக்கைகளில் ஒன்று. சில முன்னணி நடிகர்கள் தங்களை எம்.ஜி.ஆராக பாவித்துக்கொண்டு அரசியலில் பாய்ந்து காணாமல் போயினர் என்பது வரலாறு. அரசியலில் அடி வைத்துள்ள விஜயின் த.வெ.க., சினிமா கவர்ச்சி மூலமே சிம்மாசனம் ஏறிவிட முடியாது. நாட்டின் சவாலாக உருவெடுத்துள்ள பாசிச பா.ஜ.க. எதிர்ப்பில் தனது உண்மைத்தன்மையை களத்தில் மெய்ப்பிப்பதே த.வெ.க.வுக்கு சிறப்பு சேர்க்கும் என்று அவர் கூறினார்.
The post வெற்று ஆரவாரமே வெற்றியாகி விடாது.. சினிமா கவர்ச்சி மூலமே சிம்மாசனம் ஏறிவிட முடியாது: த.வெ.க. மாநாடு குறித்து ஜவாஹிருல்லா கருத்து!! appeared first on Dinakaran.