×
Saravana Stores

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..மொத்தம் எத்தனை வாக்காளர்கள் தெரியுமா?

சென்னை: தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அந்தந்த மாவட்டங்களுக்கான பட்டியலை அம்மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் வெளியிட்டார். இதில், ஆண் வாக்காளர்கள் 19,41,271 பேரும், பெண்கள் 20 லட்சத்து 9 ஆயிரத்து 975-பேரும் இயம்பெற்றுள்ளனர்.இதர வாக்காளர்கள் 1,252 பேரும் என மொத்தம் 39 லட்சத்து 52 ஆயிரத்து 498 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.மேலும் 25,628 ஆண் வாக்காளர்கள், 27,669 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 இதர வாக்காளர்கள் என மொத்தம் 53,359 வாக்காளர்களின் பெயர்கள் புதியதாக பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.25 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு முழுவதும் நவ. 16, 17, 23, 24 தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இன்று முதல் ஜனவரி 6 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். மேலும், பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். https://voters.eci.gov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*வரைவு வாக்காளர் பட்டியல்படி நெல்லை மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 13.88 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

*வரைவு வாக்காளர் பட்டியல்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 13.54 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

*வரைவு வாக்காளர் பட்டியல்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டமன்ற தொகுதிகளில் 18.89 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

*வரைவு வாக்காளர் பட்டியல்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 14.65 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

The post சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..மொத்தம் எத்தனை வாக்காளர்கள் தெரியுமா? appeared first on Dinakaran.

Tags : Assembly ,Chennai ,Tamil Nadu ,Chennai District ,Assembly Constituencies ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக...