பெரம்பலூர், அக்.29: பெரம்பலூர் அருகே பூஜை செய்வதில் ஏற்பட்ட தகராறில் ஒரு சமூகத்தினரைக் கண்டித்து மற்றொரு சமூகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் அருகேயுள்ள களரம்பட்டி கிராம ஏரிக்கரையில், இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான தேம்பாடி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவில் குடமுழுக்கு விழா கடந்த 50 நாட்களுக்கு முன்பு நடை பெற்றது. இக் கோவிலில், மண்டல பூஜை செய்வதற்கு அனுமதி கோரி ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனுமதி கேட்டதற்கு, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மறுப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக பெரம்பலூரில் சப். கலெக்டர் கோகுல் தலைமையில் நேற்று முன்தினம் சமரச பேச்சு வார்த்தை மேற்கொள்ளப் பட்டது. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி மண்டல பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று (28ஆம் தேதி) காலை மறு குடமுழுக்கு விழா நடை பெற்றது. இதில், ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தாங்கள் வருவதற்கு முன்னதாகவே குடமுழுக்கு விழா நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவிலுக்குள் சென்று பூஜை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
இதையறிந்த மற்றொரு சமூகத்தினர், காப்பு அவிழ்க்கப்பட்டதால் மீண்டும் பூஜை செய்யக் கூடாது. இதுதொடர்பாக, கோவில் செயல் அலுவலரிடம் அனுமதி பெற்று பூஜை செய்யுமாறு தெரிவித்தனராம். பின்னர், செயல் அலுவலரின் அறிவுறுத்தலின்பேரில், ஒரு சமூகத்தினர் பூஜை செய்ய முயன்றதாக கூறப் படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர், பூஜை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தொன்று தொட்டு செயல்படுத்தப் பட்டு வரும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் களரம் பட்டியிலுள்ள பெரம்பலூர்- துறையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய் மற்றும் பெரம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, மறியலில் ஈடுபட்டோரிடம் மேற்கொண்ட பேச்சு வார்த்தையில் சமூக உடன் பாடு ஏற்பட்டதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், பெரம்பலூர்- துறையூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
The post கோயிலில் பூஜை செய்வதில் இரு சமூகத்தினரிடையே தகராறு சாலை மறியலால் பரபரப்பு appeared first on Dinakaran.