புதுடெல்லி: நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு, கடந்த 1951ம் ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2011ல் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2021ல் கொரோனா பெருந்தொற்று காரணமாக பணியை மேற்கொள்ள முடியவில்லை. சுமார் 3 ஆண்டாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை நடத்த நடவடிக்கை எடுக்காதது குறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள், இம்முறை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமெனவும், மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றன.
இந்நிலையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என ஒன்றிய அரசு தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்படவில்லை. ஆனாலும், 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் கணக்கெடுப்பு நடத்தி 2026ல் மக்கள்தொகை முடிவுகள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு கால சுழற்சியில் மாற்றங்கள் இருக்கும்.
இந்த கணக்கெடுப்பு 2025-2035க்கான கணக்கெடுப்பாக இருக்கும் என்பதால் பின்னர் 2035-2045க்கானதாக அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு சுழற்சி மாற்றமடையும். இதில், சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா என்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. அதே போல, 2026ல் மக்கள் தொகை தரவுகள் வெளியிடப்பட்ட பின்னர் தான் தொகுதி மறுவரையறை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டுமென கூறப்படுகிறது.
எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா என்பது குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி தௌிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தி உள்ளார்.
கடைசி புள்ளிவிவரங்கள்
* இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ல் நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1951ம் ஆண்டிலும், கடைசியாக 2011ம் ஆண்டிலும் பதிவு செய்யப்பட்டன.
* 2011ம் ஆண்டின் தரவுகளின்படி, நாட்டின் மொத்த மக்கள் தொகை 121 கோடி. பாலின விகிதம்: 1,000 ஆண்களுக்கு 940 பெண்கள். கல்வியறிவு: 74.04 சதவீதம், 2001 முதல் 2011 வரை மக்கள்தொகை வளர்ச்சி 17.64 சதவீதம்.
* மொத்த மக்கள்தொகையில் 68.84 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். 31.16 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
* நாட்டில் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. இதில், 20 கோடியுடன் உத்தரப் பிரதேசம் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம். 64,429 மக்கள்தொகையுடன் லட்சத்தீவு குறைந்த மக்கள்தொகை கொண்ட யூனியன் பிரதேசம்.
* பரப்பளவில் ராஜஸ்தான் (3,42,239 சதுர கிமீ) மிகப்பெரிய மாநிலமாகவும், கோவா (3,702 சதுர கிமீ) சிறிய மாநிலமாகவும் உள்ளன.
* அரசியலமைப்பின் 82ம் பிரிவு திருத்தமா?
மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மக்களவை தொகுதியை மறுவரையறை செய்வதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. மக்கள்தொகை கட்டுப்பாட்டு திட்டத்தை தென் மாநிலங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தியதன் காரணமாக, தற்போது மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தொகுதி மறுவரையறை செய்தால் தங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என கவலை தெரிவித்துள்ளன.
அதே சமயம், அரசியலமைப்பு 82வது பிரிவின்படி, 2026ம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள் படியே தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டும். அதுவரை 1971ம் ஆண்டு நிலை தொடர வேண்டும். ஆகவே, 2025ல் எடுக்கப்பட்டு, 2026ல் வெளியிடப்பட்ட தரவு என்றாலும் அது 2025ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பாகவே இருக்கும். ஒருவேளை இதன்படி தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்றால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 82வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும். இது குறித்து தற்போது வரை அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
* 31 கேள்விகள்
மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது கேட்கப்பட வேண்டிய 31 கேள்விகளை பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் தயாரித்துள்ளது. இதில், முந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்கப்பட்டபடி குடும்ப தலைவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் பட்டியல் சாதி அல்லது பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவரா உள்ளிட்ட கேள்விகளும் அடங்கும்.
குடும்ப மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, குடும்பத் தலைவர் பெண்ணா, வீட்டின் குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை, திருமணமான தம்பதிகள் எத்தனை பேர் குடும்பத்தில் வசிக்கின்றனர், தொலைபேசி, இணைய இணைப்பு, மொபைல் அல்லது ஸ்மார்ட்போன் உள்ளதா, சைக்கிள், ஸ்கூட்டர், பைக், மொபெட் உள்ளதா, கார், ஜீப் அல்லது வேன் வைத்திருக்கிறீர்களா, வீட்டில் உட்கொள்ளும் தானியங்கள் என்ன, குடிநீர் ஆதாரம், விளக்குகள், கழிவறை வசதி, கழிப்பறை வகை, கழிவுநீர் வெளியேறும் இடம், குளிக்கும் வசதி, சமையலறை, காஸ் இணைப்பு, சமையலுக்கு பயன்படுத்தும் முக்கிய எரிபொருள், ரேடியோ, டிரான்சிஸ்டர், தொலைக்காட்சி உள்ளதா போன்ற கேள்விகளும் கேட்கப்படும்.
The post 4 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஒன்றிய அரசு திட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? appeared first on Dinakaran.