சென்னை: வீடற்ற ஏழை மக்களுக்காக இதுவரை ரூ.4079.08 கோடியில் 36,647 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 4 ஆண்டு அறிவிப்புகள் நிலை குறித்த ஆய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 106 திட்டப்பகுதிகளில் 4079.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 36647 அடுக்குமாடி குடியிருப்புகள் வீடற்ற ஏழை எளிய மக்களுக்காகவும், குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களுக்காகவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறந்து வைக்கப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் பயனாளிகளுக்கு விரைந்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளுக்கு விரைந்து கிரைய பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இதுவரை “ நம் குடியிருப்பு நம் பொறுப்பு “ திட்டத்தின் கீழ் 692 சங்கங்கள் உருவாக்கப்பட்டு அதில் 554 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலம் பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் காகர்லா உஷா, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண்மை இயக்குநர் விஜயகார்த்திகேயன், வாரிய செயலாளர் காளிதாஸ், வாரிய தலைமை பொறியாளர் லால் பகதூர், மேற்பார்வை பொறியாளர் (பொ) இளம்பரிதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post வீடற்ற ஏழை எளிய மக்களுக்காக இதுவரை ரூ.4079 கோடியில் 36,647 அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.