×

2 நாட்களாக அடுத்தடுத்து குடைச்சல் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் சீனா

* அருணாச்சலத்தில் ஊர் பெயர் மாற்றம்* இந்திய எம்பி.க்களுக்கு மிரட்டல் கடிதம்புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் எல்லையில் நடந்த மோதல், ராணுவம் குவிப்பு பிரச்னைகளுக்கு பிறகு இந்தியா – சீனா இடையே பதற்றம் நீடித்து வருகிறது. இதை தணிப்பதற்காக இரு நாடுகளின் உயர் ராணுவ அதிகாரிகள் நடத்திய 13 கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் சுமூக முடிவு எட்டப்படாமல் உள்ளது. பேச்சுவார்த்தைகளின் பயனாக, குறிப்பிட்ட சில சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து மட்டும் இருதரப்பிலும் படைகள் விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, சீனாவும் தனது எல்லையை விரிவுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், கிழக்கு லடாக், திபெத் பகுதி மூலம் அவ்வபோது மறைமுகமான மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. மேலும், இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், மாலத்தீவு ஆகியவற்றுக்கு கடன் உதவி அளித்து, இந்தியாவுக்கு எதிராக செயல்பட தூண்டி விடுகிறது. இதே போல், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு ஆப்கானிஸ்தான் விவகாரத்திலும் உலக நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்படுகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கூட, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 8 மக்கள் குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள், ஒரு கணவாய் பகுதி என மொத்தம் 15 பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டி சீனா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சீன அமைச்சரவையின் இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்த வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, `அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும். புதிய பெயர்களை சூட்டுவதால் அதன் உண்மைத்தன்மையை எப்போதும் மாற்ற முடியாது. இந்திய பகுதிகளுக்கு சீனா புதிய பெயர் சூட்டுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் இது போன்று 6 பகுதிகளுக்கு புதிய பெயர் சூட்டிய பட்டியலை சீனா வெளியிட்டது,’ என்று கூறியுள்ளார்.இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், அருணாச்சல் பிரதேசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 15க்கு மேற்பட்ட பகுதிகளும் சீனாவுக்கு சொந்தமானது என்று சீனா கூறியுள்ளது. நேற்றும் சீன வெளியுறவுத் துறை, இந்தியாவின் கண்டனத்தை ஒதுக்கவிட்டு இந்த கருத்தை தெரிவித்தது. இந்த புதிய பெயர் சூட்டல் சர்ச்சையால் இருநாடுகளும் மோதிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய எம்பி.க்களுக்கு மிரட்டல் கடிதத்தை சீன தூதரகம் எழுதியுள்ளது.சீனாவின் அடக்கு முறையால் திபெத்தில் இருந்து தப்பி வந்து இந்தியாவில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள தலாய் லாமாவின் சார்பில் சில தினங்களுக்கு முன் பல்வேறு கட்சிகளை சேர்ந்த இந்திய எம்பி.க்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இதில், கலந்து கொள்ளும்படி அனைத்து கட்சி நாடாளுமன்ற எம்பி.க்கள் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அக்குழுவில் இடம் பெற்றுள்ள 6 எம்பி.க்களும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியாவில் உள்ள சீன தூதரகம். இந்த 6 எம்பி.க்களுக்கும் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், ‘தலாய் லாமாவின் புத்தாண்டு நிகழ்ச்சியில் எம்பி.க்கள் பங்கேற்றது கவலை அளிக்கிறது. திபெத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திபெத்துக்கான நாடாளுமன்ற குழுவின் ஒருங்கிணைப்பாளரும் பிஜூ ஜனதா தள எம்பியுமான சுஜித்குமார் கூறுகையில், `சீன தூதரகம் எம்பி.க்களுக்கு கடிதம் எழுதியதை வன்மையாக கண்டிக்கிறேன். ஆனால், கடிதம் அனுப்பப்படுவது இது முதல் முறையல்ல. இதுபோன்று பலமுறை கடிதங்கள் வந்துள்ளது. சீன தூதரகம் இந்திய எம்பி.க்களுக்கு கடிதம் எழுதுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. இது இருநாடுகளின் வெளியுறவு கொள்கையை மீறிய செயலாகும்,’ என தெரிவித்தார். “அதே நேரம், இது போன்ற நிகழ்ச்சிகளில் எம்பி.க்கள் கலந்து கொள்வது அரசியல் ரீதியாக அல்ல. மாறாக, இரு தரப்பு பண்பாடு, கலாசாரம், வர்த்தகம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்குதான்,’ என்றும் அவர் வலியுறுத்தினார்.இது பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரும் திபெத்துக்கான நாடாளுமன்ற குழுவின் உறுப்பினருமான மணீஷ் திவாரி கூறுகையில், ‘‘இது தொடர்பாக சில ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியை பார்த்தேன். எனக்கு எந்த கடிதமும் வரவில்லை. இதற்கு பதிலளிப்பதன் மூலம் என்னை இழிவுபடுத்தி கொள்ள விரும்பவில்லை. ஒருவேளை, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கடிதம் அனுப்பி இருந்தால், பதிலளிப்பது பற்றி எண்ணியிருப்பேன்,” என்று கூறினார். இவ்வாறு அடுத்தடுத்த நாளில் இந்தியாவை சீண்டியுள்ள சீனாவின் இந்த போக்கு, இருநாடுகளுக்கும் இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.பாக். துறைமுகத்தை வளைத்து போட்டதுசீனா தனது பொருளாதார பட்டுப்பாதை திட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் பல லட்சம்  கோடி செலவில் பல்வேறு  திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இதன் மூலம், பாகிஸ்தானை தனது நாட்டின் அடிமையாக்கி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, அதன் சொல்படி இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளில் பாகிஸ்தான் அதிகமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தனது நாட்டின் பலுதிஸ்தான் மாகாணத்தில் உள்ள ராணுவம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த குவாதார் துறைமுகத்தை சீனாவுக்கு அது தாரை வார்த்துள்ளது. பொருளாதார பட்டுப்பாைத திட்டத்தின் ஒரு அம்சமாக, இந்த துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி செலவில் சீனா புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த உள்ளது. இந்த துறைமுகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதின் மூலம், அரபிக் கடலிலும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்பு சீனாவுக்கு கிடைத்துள்ளது. இந்த திட்டத்துக்கு இந்தியா ஏற்கனவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காரணம், இந்த துறைமுகத்துடன் இணைப்பதற்கான சாலைகள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகவும் அமைக்கப்படுகிறது. இந்த பகுதிக்கு சொந்தம் கொண்டாடி வரும் இந்தியா, பாகிஸ்தான் இதை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதாக சர்வதேச அளவில் சர்ச்சையை கிளப்பி கொண்டிருக்கிறது. மேலும், இந்த பகுதியை பாகிஸ்தானிடம் இருந்து மீட்காமல் விட மாட்டோம் என்று தற்போதைய ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து கூறி வருகிறது.9 ஆயிரம் சதுர கிமீ சொந்தமாம்* அருணாச்சல பிரதேசத்தை தனக்கு சொந்தமான தெற்கு திபெத்தை சேர்ந்த பகுதி என்று கூறி வரும் சீனா, அதை ‘சங்க்னன்’ என்ற பெயரில் அழைத்து வருகிறது.* அருணாச்சல பிரதேசத்தின் 9 ஆயிரம் சதுர கிமீ பகுதி, தெற்கு திபெத்துக்கு சொந்தமானது என்று சீனா  உரிமை கோரி வருகிறது.* இதற்கு முன், கடந்த 2017ம் ஆண்டு, ஏப்ரலில் அருணாச்சல பிரதேசத்தின் 6 பகுதிகளுக்கு புதிய பெயர்களை சூட்டிய அறிவிப்பை சீனா வெளியிட்டது….

The post 2 நாட்களாக அடுத்தடுத்து குடைச்சல் இந்தியாவுக்கு ஆத்திரமூட்டும் சீனா appeared first on Dinakaran.

Tags : China ,India ,Arunachala ,eastern ladakh ,
× RELATED மீண்டும் சர்ச்சை கிளம்பியது; சீன...