×
Saravana Stores

வேளாண்மைத்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுதொகை

* ரூ.611 கோடியில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்

சென்னை: வேளாண்மைத் துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. மேலும் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது என வேளாண் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை: 29.34 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை முதலமைச்சர் பொறுப்பேற்ற 2021ம் ஆண்டுக்குப் பின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 29 லட்சத்து 34 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் மழை, வறட்சி ஆகிய பேரிடர்களால் 19.84 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு மொத்தம் ரூ.833.88 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டு 11.95 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 2021க்குப் பின் வடகிழக்குப் பருவமழை, 2022- தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை, மண்டஸ் புயல் – 2023 – சூறைக்காற்று, மிக்ஜாம் புயல், தென் மாவட்டங்களில் பெருமழை பாதிப்புகள் ஆகியவற்றால் ஏற்பட்ட தோட்டக்கலைப் பயிர்கள் பாதிப்புகளுக்கு மட்டும் 1,19,519 விவசாயிகளுக்கு ரூ.91.7 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாய நிலப்பரப்பு 95 ஆயிரம் எக்டரிலிருந்து 1 லட்சத்து 54 ஆயிரம் எக்டராக அதிகரித்துள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கரும்பு உற்பத்தி ஊக்கத் தொகை மற்றும் சிறப்பு ஊக்கத் தொகையாக ரூ.624 கோடி 4 லட்சத்து 44 ஆயிரத்து 857 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 113 விவசாயிகளுக்கு கரும்பு அறுவடை இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைக் கடனாக ரூ.600 கோடி வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.

விவசாயிகளுக்கு 4,104 டிராக்டர்கள், 10,814 பவர் டில்லர்கள், 332 அறுவடை இயந்திரங்கள், 28,140 பிற விவசாயக் கருவிகள் உட்பட மொத்தம் 43,390 வேளாண் பொறியியல் கருவிகள் ரூ.335.16 கோடி மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன. ஆதிதிராவிட – பழங்குடியின மக்களுக்கு ரூ.73.14 கோடியில் 1,311 கிணறுகள், மின்சார, சூரிய சக்தி பம்ப்செட்டுகள் 100 சதவிகித மானியத்தில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. முதன் முறையக ஆதி திராவிடர்- பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உழவர் சந்தைகள்: ரூ.27.5 கோடி செலவில் 100 உழவர் சந்தைகள் புனரமைக்கப்பட்டுள்ளன. 14 புதிய உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ரூ.2.75 கோடி செலவில் 25 உழவர் சந்தைகளில் காய்கறி கழிவுகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருவாரூர் உழவர்சந்தை புதுப்பொலிவுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சி தொடங்கிய 2021-2022 முதலாண்டிலேயே உணவு தானிய உற்பத்தி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம்-11.74 லட்சம் மெட்ரிக் டன் அதிகரித்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ரூ.187 கோடி ஒதுக்கீட்டிலான குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு அளித்த ஊக்கத்தினால் 2021-ல் 4.90 லட்சம் ஏக்கரிலும், 2022ல் 5.36 லட்சம் ஏக்கரிலும் 2023ம் ஆண்டில் 48 ஆண்டுகளாக இல்லாத சாதனையாக 5.59 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்யப்பட்டு உற்பத்தி அதிகரித்து விவசாயிகள் பயனடைந்தனர். அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்திட ரூ.14.94 கோடி செலவில் 1,75,052 விவசாயிகளுக்குத் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டன.

நெற்பயிர் உற்பத்தித் திறனை அதிகரித்திட 4.41 லட்சம் ஏக்கருக்கு ரூ.12.96 கோடியில் துத்தநாகம் சல்பேட் மற்றும் ஜிப்சம் வழங்கப்பட்டு 4.50 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். கம்பு, கேழ்வரகு, வரகு, தினை, குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியப் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ.65.29 கோடியில் சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு 2,99,725 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
ரூ. 138/82 கோடி செலவில் பயறு பெருக்குத் திட்டம் செயல்படுத்தப்பட்டு 5,67,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: முதலமைச்சரின் தொலைநோக்குப் பார்வையின்படி தமிழ்நாட்டின் நிகர சாகுபடிப் பரப்பினை அதிகரித்திட 12,525 கிராம ஊராட்சிகளிலும் நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி, தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்றி ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி மற்றும் தன்னிறைவு அடைந்திடும் நோக்கத்துடன் கலைஞரின்அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் ஒருங்கிணைந்து 2021-22ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த மூன்றாண்டுகளில் ரூ.610.52 கோடியில் 7,705 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு 23,281 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும் 4,487 ஏக்கர் பரப்பளவில் பழமரக் கன்றுகளும் நடவு செய்யப்பட்டு தரிசு நிலங்கள் நிரந்தரச் சாகுபடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 44,43,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா:

இப்படிப் பல்வேறு திட்டங்களின் மூலம் சிறப்பான முன்னேற்றங்கள் கண்டு பல விருதுகளைப் பெற்று வேளாண்துறை சென்னை மாநகரின் மையப் பகுதியில் கதீட்ரல் சாலையில் செங்காந்தன் பூங்கா அருகில் 6.09 ஏக்கர் நிலத்தில ரூ.25 கோடி செலவில் பொதுமக்களுக்குப் புத்துணர்வை அளிக்கும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்காவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி திறந்துவைத்தார்.

இப்பூங்கா தமிழ்நாடு வேளாண்துறை வரலாற்றில் மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கே ஒரு புதிய அணிகலனாக விளங்கி அனைவரையும் கவர்ந்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்தகைய சீர்மிகு திட்டங்களால் வேளாண்மைத் துறை உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, அண்டை மாநிலங்களுக்கும் உணவுப்பொருள்களை வழங்கி தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கம்
* மூன்றாண்டுகளில் 11,76,400 எக்டேர் நிலங்களில் ரூ.83.46 கோடி நிதி ஒதுக்கீட்டில் எள், சோயா, பீன்ஸ் முதலான எண்ணெய் வித்துகள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்பட்டு 4.03 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* தென்னை சாகுபடிப் பரப்பை அதிகரித்திடும் திட்டத்தின் கீழ் ரூ.40.59 கோடி செலவில் 19,922 தென்னை விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

* திராவிட மாடல் அரசினால் ரூ.39.77 கோடி செலவில் 2,33,701 விவசாயிகளுக்கு வேளாண் கருவித் தொகுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் பழங்குடியினருக்கு 90 சதவீத மானியத்திலும், சிறு குறு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் வேளாண் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

The post வேளாண்மைத்துறையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது: விவசாயிகளுக்கு ரூ.5,148 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டுதொகை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,India ,Kalanagar ,Chennai ,Agriculture Department ,
× RELATED மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கே என...