சென்னை: மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி நீள்வதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கை : சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை.
கன்னித்தீவு கதை போல நீளும் சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தாமதப்படுத்தி வருகிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.
வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டையும் சேர்த்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரி பாசன நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாலும், வயல்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டியிருப்பதாலும் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வீதம் நான்காண்டுகளுக்கு சேர்த்து ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி நீள்வதால் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.