×
Saravana Stores

ஒடிசா ரயில் விபத்து இழப்பீடு கூடுதல் நிதி கேட்டு 841 பேர் ரயில்வே தீர்ப்பாயத்தில் மனு

* ரயில்வே நிர்வாகம் குறைந்த நிதியே வழங்கியதால் அதிருப்தி, தெற்கு ரயில்வே ரூ.21.84 கோடி இழப்பீடு வழங்கியது, ஆர்டிஐ தகவல்

சென்னை: கடந்தாண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் ரயில்வே நிர்வாகம் மிக குறைவான நிதி கொடுத்ததால் கூடுதல் நிதி கேட்டு 841 பேர் ரயில்வே தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது. ஒடிசாவின் பாலசூர் பகுதியில் கடந்த ஜூன் மாதம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 293 பேர் உயிரிழந்தனர். 1,000 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு சரியான நிவாரண நிதி கிடைக்கப்படவில்லை.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். இழப்பீடு கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு ரயில்வே நிர்வாகம் பல வகையில் ஏமாற்றத்தை தருவது தொடர்ந்து வருகிறது. ஏறத்தாழ நீதிமன்றம் போலவே செயல்படும் இந்த தீர்ப்பாயத்தில் வழக்குகள் நடத்தப்படும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகையை விட இங்கு, அதிகமாக வழங்கப்பட்டதால், பலரும் ரயில்வே தீர்ப்பாயத்தை நாடியுள்ளனர்.

உதாரணத்திற்கு, கர்ப்பிணி பெண்கள் இருவருக்கு ரயில்வே சார்பாக ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால், ரயில்வே தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்து வழக்கு நடத்தியதன் முடிவில், ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் மற்றொருவருக்கு ரூ.80 ஆயிரம் வழங்கப்பட்டது. ஒடிசாவில் நடந்த விபத்து நடந்து சில மணி நேரத்திற்கு பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படுமென ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

எனினும், பாதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 1,102 பேரில், 76% பேர் சென்னை, கொல்கத்தா, புவனேஷ்வர், ராஞ்சி, பாட்னா மற்றும் போபாலில் உள்ள ரயில்வே தீர்ப்பாயங்களில் கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்தனர். இதில் தாக்கல் செய்யப்பட்ட 841 மனுக்களில், 193 மனுக்கள் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரும், 648 மனுக்களை படுகாயமடைந்தவர்களும் தாக்கல் செய்திருந்தனர். இதில் 608 பேர் ஏற்கனவே ரயில்வே சார்பில் வழங்கப்பட்ட இழப்பீடு தொகையை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 183 பேருக்கு கூடுதலாக ரூ. 8 லட்சம் வழங்கப்பட்டது.

இந்த 841 மனுக்கள் மீது ஆய்வு மேற்கொண்டதில், பல தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 90 பேருக்கு ரயில்வே மற்றும் மாநில அரசு சார்பில் இழப்பீடு வழங்கவில்லை எனவும், தீர்ப்பாயத்தின் மூலம் மட்டுமே இழப்பீடு தொகையை பெற்றனர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், ஒடிசாவைச் சேர்ந்த உயிரிழந்த நபர் ஒருவரின் குடும்பத்திற்கும், மொத்தமாக காயமடைந்தவர்களில் 232 பேருக்கும் ரயில்வே சார்பில் இழப்பீடு வழங்கவில்லை. உயிரிழந்த 297 நபர்களில் 27 பேரின் உடல் அடையாளம் காண முடியாமல் போனது.

இந்நிலையில், காயமடைந்த 215 பேர் எவ்வாறு விபத்தில் தொடர்புடையவர்கள் என ரயில்வே நிர்வாகம் கேள்வி எழுப்பிருந்தது. தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது சிலர் தங்கள் இழப்புகள் குறித்து தெரிவிக்க முடியாததால், குறைவான நிவாரண தொகையே பெற முடிந்துள்ளது. ரயில்வே தீர்ப்பாயத்தில் 841 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் ரூ. 40 கோடியே 60 லட்சம் இழப்பீடாக கோரப்பட்டுள்ளது. இவற்றில் 793 மனுக்கள் மீது ரூ. 18 கோடியே 69 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் 80% உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சராசரியாக சுமார் ரூ. 4 லட்சத்து 32 ஆயிரம் இழப்பீடு கோரியிருந்த நிலையில், தீர்ப்பாயம் தரப்பில் சராசரியாக ரூ.68 ஆயிரத்து 284 இழப்பீடாக வழங்கியுள்ளது. இந்த வழக்குகளில் ரயில்வே நிர்வாகம், மாநில அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ.23 கோடியே 23 லட்சத்தை விட தீர்ப்பாயம் சார்பில் அதிகமாக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மொத்தம் ரூ.32.8 கோடி இழப்பீடு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.27 கோடியும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.5.8 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைதளத்தில், ரயில்வே தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தலின் பேரில், ரூ. 21.84 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் படி, சென்னையில், எந்தவொரு விண்ணப்பதாரரும் தாங்கள் கோர விரும்பும் தொகையை குறிப்பிடவில்லை.

அவர்களின் காயங்கள் ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனிடையே, ஹைதர் என்பவர் ரயிலில் பயணித்ததற்கான சரியான ஆதாரம் இல்லை எனக் கூறி அவருக்கு இழப்பீடு வழங்கப்படாமல் இருந்தது. அதன்பின்னர், அவருக்கு ரூ. 20 ஆயிரத்தை இழப்பீடாக தீர்ப்பாயம் வழங்கியது. விபத்து நடந்து 3 மாதங்களுக்குப் பிறகு, சிபிஐ தரப்பில் மூன்று ரயில்வே ஊழியர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது தவிர, ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விசாரணை அடிப்படையில், 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

* சரியான நிதி வழங்கவில்லை
இதுகுறித்து ரயில் விபத்தில் காயமடைந்த சென்னையை சேர்ந்த நபர் கூறுகையில், சென்னையை பொறுத்தவரை, பல விண்ணப்பத்தாரர்களுக்கு உரிய நிதி வழங்கப்படவில்லை. பல தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் என்பதால், அவர்களுக்கு ரயில்வே நிவாரண நிதி குறித்தான தகவல் தெரியாததால் அவர்களுக்கு குறைந்தப்பட்ச நிதியே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. நாங்களும் வந்தால் போதும் என்ற மனநிலையில் பெற்றுக் கொண்டோம்” என்றார்.

The post ஒடிசா ரயில் விபத்து இழப்பீடு கூடுதல் நிதி கேட்டு 841 பேர் ரயில்வே தீர்ப்பாயத்தில் மனு appeared first on Dinakaran.

Tags : Railway Tribunal ,Odisha ,Southern Railway ,RTI ,Chennai ,Dinakaran ,
× RELATED பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு