சென்னை: அண்ணாநகர் பூங்காவில் உள்ள 135 அடி உயரமுள்ள டவரின் உச்சியில் ஏறி போலீஸ்காரர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் 135 அடி உயரமுள்ள டவரின் உச்சியின் மீது ஏறிய வாலிபர் திடீரென, ‘நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.. சென்னை கமிஷனர் இங்கு நேரில் வர வேண்டும், அப்படி இல்லை என்றால் கீழே குதித்து விடுவேன்’ என்று மிரட்டல் விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அந்த பூங்காவில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறைக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், அந்த வாலிபரை கீழே இறங்கும்படி 1 மணி நேரமாக போராடினர். ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர். ஆனால் அந்த வாலிபர் கீழே இறங்க மறுத்தார். “காவல் ஆணையர் நேரில் இங்கு வந்து என் கோரிக்கையை கேட்க வேண்டும்” என மீண்டும் மீண்டும் கூறினார்.
அதன் பின்னர் பல மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அந்த வாலிபரை பத்திரமாக மீட்டு அண்ணாநகர் காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
பின்னர் அவரை துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்ததில், அந்த வாலிபர் பரிஷ்பாட்ஷா (22) என்பதும், ஆவடியில் தமிழ்நாடு சிறப்பு காவலராக பணிபுரிவதும் தெரியவந்தது. இவர் எதற்காக டவரின் மீது ஏறினார், காரணம் என்ன என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். 135 அடி உயர டவரில் ஏறி போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post 135 அடி உயரமுள்ள அண்ணாநகர் டவரில் ஏறி போலீஸ்காரர் தற்கொலை மிரட்டல்: தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர் appeared first on Dinakaran.