மும்பை: கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலைத் தொடர்ந்து இந்தியா, சீனா இரு நாடுகளும் படைகளை குவித்தன. இதனால் கடந்த நான்கரை ஆண்டாக எல்லையில் பதற்றம் நிலவியது. இதற்கிடையே சமீபத்தில், பிரச்னைக்குரிய பகுதியில் படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நான்கரை ஆண்டு பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டு, 2020ல் இருந்த நிலை திரும்பும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை கூறியிருந்தார்.
இது தொடர்பாக மும்பையில் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கிழக்கு லடாக்கில் டெப்சாங் மற்றும் டெம்சோக் பகுதிகளில் ரோந்து பணியை தொடங்குவது குறித்து சீனாவுடன் கடந்த 21ம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதை நடைமுறைப்படுத்த சில நாட்கள் ஆகலாம். இங்கு இந்திய, சீன ராணுவ துருப்புகள் மிகவும் நெருங்கி வந்துள்ளன. இதனால் ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க தற்போது பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்டு இரு நாட்டு வீரர்களும் அவரவர் முகாம்களுக்கு பின்னோக்கி செல்வார்கள். அதன்பிறகு இங்கு கடந்த 2020ம் ஆண்டைப் போல ரோந்து பணிகள் நடைபெறும்.
இது எல்லைப் பிரச்னையை தீர்ப்பதற்கான முதல் படி. இதைத் தவிர வேறு நிறைய பிரச்னைகள் தீர்க்கப்பட உள்ளன. அடுத்ததாக எல்லையில் இரு தரப்பிலும் படைகளை குறைப்பது குறித்து பேசப்படும். இந்த விஷயத்தில் சீனா தனது படையை குறைத்துக் கொண்டதை உறுதி செய்யும் வரையிலும் இந்தியா பின்வாங்காது. இதைப் பற்றி அடுத்ததாக பேசி எல்லையை நிர்வகிப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும். பாஜ ஆளும் மாநிலங்களில் மட்டுமே அனைத்து திட்டங்களும் வந்துள்ளன என்பதை ஏற்க முடியாது ’’ என்றார்.
The post கடந்த 2020ம் ஆண்டில் இருந்தபடி கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து செல்வது முதல் படி: மும்பையில் ஜெய்சங்கர் பேச்சு appeared first on Dinakaran.