சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் இன்று அதிகாலை 4 மணி முதல், மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில்கள் ஆவடியில் இருந்தும், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் கொருக்குப்பேட்டையில் இருந்தும் இரு மார்க்கத்திலும் இயக்கப்படும். கடற்கரையில் இருந்து ஆவடிக்கு இயங்கும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஒரு சில ரயில்கள் கடற்கரைக்கு பதிலாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து இயங்கும். சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 3.55 மணி, தாம்பரத்துக்கு காலை 4.15, 4.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணி முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு 23 சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை பூங்காவில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டில் இருந்து அதிகாலை 4 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் பூங்கா ரயில் நிலையத்திற்கு 25 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.55 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மாலை 5 மணிக்குப் பிறகு ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
The post கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் இன்று ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.