ஜெயங்கொண்டம், அக்.26: அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் மாவட்டத்திற்கு உள்ளான விவசாயிகள் கண்டுனர் சுற்றுலா இனத்தின் கீழ் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்த பயிற்சிக்கு கிரீடு வேளாண் அறிவியல் மையத்திற்கு விவசாயிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இப்பயிற்சியில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து சாகுபடி செய்து வரும் பெரியதத்தூர் கிராம விவசாயி சுந்தரேசன் பேசுகையில் பாரம்பரிய நெல் ரகங்களான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார், சித்ரகார், தூயமல்லி, மைசூர் மல்லி, ராஜபோகம் முதலிய பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்களின் வயது மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும் விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களில் கருப்பு கவுனி தவிர இதர ரகங்களை சாதாரண முறையில் அவியல் செய்து அரிசி ஆக்கி பயன்படுத்தலாம் எனவும் கூறினார்.
கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் அசோக்குமார் பேசுகையில் இயற்கை முறையில் தக்கை பூண்டு விதைப்பு, பஞ்சகாவியம், ஜீவாமிர்தம், மீன் அமிலம், இயற்கை பூச்சி விரட்டி, இஞ்சி பூண்டு கரைசல் கொண்டு மண்வளத்தை பெருக்கும் முறை மற்றும் பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். முன்னதாக வரவேற்று பேசிய அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் விஜயகுமார் அட்மா திட்டம் அதன் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார். இப்ப பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனர்.
The post ஆண்டிமடம் வட்டார விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் பயிற்சி appeared first on Dinakaran.