- தர்ணா எதிர்ப்பு
- விழுப்புரம்
- சி.வி ஷண்முகம்
- அஇஅதிமுக
- விழுப்புரம் மாவட்டம்
- சமாஜ்வாடி
- தர்ணா
- சுயவிவரம்
- சண்முகம்
- தின மலர்
விழுப்புரம், அக். 26: விழுப்புரத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்பி சி.வி.சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர் சி.வி சண்முகம் எம்பி நேற்று எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிப்பதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு எஸ்பி இல்லாதால் சிறிது நேரம் காத்திருந்த அவரிடம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி, விக்கிரவாண்டியில் த.வெ.க மாநாடு குறித்து ஐஜி ஆலோசனை கூட்டத்திற்கு எஸ்பி சென்றிருப்பதாக தெரிவித்தார். ஏற்கனவே நான் வருவது குறித்த தகவல் அளித்து சந்திக்க அனுமதி வழங்கிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.
நான் ஒரு மக்கள் பிரதிநிதி எனக்கே இந்த நிலையா? என்று கூறிய சி.வி சண்முகம் எம்பி திடீரென்று விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்டவளாகம் எதிரே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சி.வி சண்முகம் எம்பி கூறுகையில், விசிக நடத்திய மதுஒழிப்பு மாநாட்டில் நான் கலந்து கொள்ள போவதாக போலியாக, தவறான தகவல் பரப்பப்பட்டது. இதேபோல் விக்கிரவாண்டி இடைதேர்தலிலும் என்னைப்பற்றி அவதூறு பரப்பினர்.
இதுவரை நான் அளித்த 23 புகார்கள் மீது எந்த நடவடிக்கையும், வழக்குபதிவு செய்யவில்லை, என்றார். தொடர்ந்து டிஎஸ்பி ராமலிங்கம் தலைமையிலான போலீசார் பேச்சு நடத்திய போது, எஸ்பி வரும் வரை போராட்டத்தில் ஈடுபடபோவதாக கூறினார். தொடர்ந்து சி.வி சண்முகம் எம்பியை போலீசார் கைது செய்து ஜீப்பில் ஏற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை அகற்றியபோது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர். இதனிடையே சி.வி சண்முகம் கைதை கண்டித்து திண்டிவனம், மயிலம், கூட்டேரிபட்டு உள்ளிட்ட இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட சி.வி சண்முகம் எம்பி மாலையில் விடுவிக்கப்பட்டார்.
The post விழுப்புரத்தில் தர்ணா போராட்டம் சி.வி சண்முகம் எம்பி கைது appeared first on Dinakaran.