×
Saravana Stores

பாடத்திட்டத்தில் ஆரியன், திராவிடன் கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர் அல்ல: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில், மாணவர்கள் மத்தியில் பாடத்திட்டத்தில் ஆரியன், திராவிடன் என்ற இனம் தொடர்பானவற்றை பரப்பக்கூடாது என்று ஒன்றிய கல்வி அமைச்சகம், தேசிய கல்வி கவுன்சில், தமிழக பள்ளி கல்வி துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழக பள்ளி கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்கள் மத்தியில் ஆரியன், திராவிடன் என்று 2 இனங்களை பரப்புகிறார்கள். இதனால், மாணவர்கள் மனதில் தவறான விளைவுகளை ஏற்படுகிறது என்றார். அதற்கு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ெஜ.ரவீந்திரன் ஆஜராகி, நிபுணர்களின் ஆய்வு மற்றும் அவர்களிடம் இருந்து பெறும் ஆலோசனைகளின் அடிப்படையில் பாடத்திட்டம் வகுக்கப்படுகிறது.

மனுதாரர் மனு கொடுக்கும் பட்சத்தில் அவரது மனு குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலித்து முடிக்கப்படும் என்றார். ஒன்றிய அரசு தரப்பில் துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன் ஆஜராகி, தமிழக அரசு தரப்பு கூறியதைபோல் தேசிய கல்வி கவுன்சிலுக்கு மனுதாரர் மனு அனுப்பலாம் என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இனம் மற்றும் தோற்றம் ஆகியவற்றின் வரலாறு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர் அல்ல. இரு இன கோட்பாடு என்பது குறித்து ஆய்வு செய்யாமல் அது தவறா, செல்லுமா, செல்லாதா என்று உத்தரவிட முடியாது.

இந்த விஷயத்தை நீதிமன்றத்தால் அல்ல, சம்பந்தப்பட்ட துறையின் நிபுணர்களால் மட்டுமே தீர்மானிக்க முடியும். இந்த வழக்கில் எந்த கருத்தையும் கூற முடியாது. எனவே, தேசிய கல்வி கவுன்சில் மற்றும் தமிழ்நாடு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆகியவை இந்த மனுவில் கூறப்பட்டுள்ள மனுதாரரின் கோரிக்கைகளை பரிசீலித்து 12 வாரங்களுக்குள் முடித்துவைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

The post பாடத்திட்டத்தில் ஆரியன், திராவிடன் கோட்பாடு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் நிபுணர் அல்ல: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கருத்து appeared first on Dinakaran.

Tags : Aryan ,Supreme Court ,Chennai ,Mahalingam Balaji ,Madras High Court ,Union Ministry of Education ,National Council of Education ,Tamil Nadu School Education Department ,Dravidian ,High Court ,Chief Justice Session ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...