×
Saravana Stores

டாலருக்கு பதில் புதிய கரன்சியா: பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய ஆலோசனை.! சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்க அதிரடி

அமெரிக்காவின் டாலர் மதிப்பை முடிவுக்கு கொண்டு வர ‘பிரிக்ஸ்’ மாநாட்டில் புதிய கரன்சி கொண்டு வர முடிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவின் கசான் நகரில் ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு சமீபத்தில் நடந்தது. இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய பிரதமர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான நிதி சீர்திருத்தங்கள் தொடர்பான பல விவாதங்கள் நடந்தன. அதில் அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வர ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த யூரோ கரன்சி போல் பிரிக்ஸ் நாடுகள் இணைந்து புதிய கரன்சியை அறிமுகப்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், ரஷ்ய அதிகாரி ஒருவர் அந்நாட்டு அதிபர் புதினிடம் பிரிக்ஸ் கரன்சி நோட்டைக் கொடுக்கிறார். அதனை அவர் தனது அமைச்சர்களிடம் காட்டிவிட்டு பின்னர் ரஷ்ய நாட்டின் ரிசர்வ் வங்கியின் தலைவரிடம் ஒப்படைப்பதாக உள்ளது. இந்த கரன்சி நோட்டின் படத்தை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் இந்தியாவின் மூவர்ணக் கொடியுடன் தாஜ்மஹாலின் படமும் இடம்பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டை பார்க்கும் போது, அமெரிக்க டாலருக்கு மாற்றாக ‘பிரிக்ஸ்’ நாடுகளின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கரன்சியாக கூறுகிறார்கள். உலக வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பிரிக்ஸ் நாடுகள் சார்பில் இந்த கரன்சி உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதை யாரும் உறுதிப்படுத்தவில்லை. உலக அளவில் 54 சதவீத வர்த்தகமானது, அமெரிக்கா ரூபாயான டாலரை அடிப்படையாகக் கொண்ேட தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக, சவூதி அரேபியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினால், அதற்கு அமெரிக்க நாணயமான அமெரிக்க டாலரில் பணத்தை செலுத்த வேண்டும். ஆனால் இந்தியாவின் நாணயம் ரூபாயிலும், சவுதி அரேபியாவின் நாணயம் சவுதி ரியாலும் நடைமுறையில் இருக்கும் போது, டாலரை பயன்படுத்தி வர்த்தகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

டாலரின் மதிப்பு எப்போதெல்லாம் ஏற்றம் இறக்கம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்தியா – சவுதி இடையிலான நிதி தொடர்பான பரிமாற்றங்களிலும் ஏற்ற இறக்கம் ஏற்படும். இதை தான் பல நாடுகளும் எதிர்கின்றன. எனவே தான் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டு வர மற்ற நாடுகள் நினைக்கின்றன. அமெரிக்க டாலருக்கு மாற்றாக மற்ற நாணயங்களை அடிப்படையாக வைத்து வர்த்தகம் செய்வதை ‘டி-டாலரைசேஷன்’ என்று கூறுகின்றனர். சர்வதேச அளவில் உலகின் 60% நிதி கையிருப்புகள் அமெரிக்க டாலர்களில் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த 1939 – 1945ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நடந்த இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் டாலர் மதிப்பானது சர்வதேச அளவில் முதன்மை கரன்சியாக மாறியதால், மற்ற நாடுகளும் அதை நம்பி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனாலேயே உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கம் தொடர்ந்து நிலவி வருகிறது.

இவ்வாறான நிலை இருப்பதால் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் தங்களது பொருளாதார வளர்ச்சியை சர்வதேச அளவிற்கு முன்னெடுத்து செல்வதில் பாதிப்புகளை சந்திக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்திய ரூபாய்க்கு எதிராக டாலரின் வளர்ச்சியானது, இந்திய ரூபாயை மதிப்பற்றதாக மாற்றிவிடுகிறது. இதே பிரச்னை சீனா, ரஷ்யா உள்ளிட்ட பெரிய நாடுகளுக்கும் இருக்கிறது. இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமானால், டாலருக்கு எதிராக புதிய கரன்சிகளை உருவாக்க வேண்டும் என்று அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் நாடுகள் நீண்டநாட்களாக யோசித்து வருகின்றன. ஏனெனில் நிதி நெருக்கடி, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் அமெரிக்காவின் டாலர் மதிப்பு கணிக்க முடியாத அளவுக்கு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

அதிலும் கொரோனா காலத்திற்கு பின் அமெரிக்க டாலரில் ஏற்படும் மாற்றம், சர்வதேச அளவில் பொருளாதார உறுதியற்ற தன்மையை உருவாக்கி உள்ளது. இதைத் தவிர்க்கும் பொருட்டே, டாலர் பயன்பாட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் பிரிக்ஸ் நாடுகள் களத்தில் இறங்கியிருப்பதாக் கூறப்படுகிறது. எனவே டாலர் மதிப்பிழப்பை (டி-டாலரைசேஷன்) ஆதரிக்கும் நாடுகளில் சீனாவும், ரஷ்யாவும் முன்னிலையில் உள்ளன. பிரிக்ஸ் நாடுகளில் அங்கம் வகிக்கும், தென்னாப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளன. முதற்கட்டமாக ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களுக்குள் வர்த்தகம் செய்து கொள்ளும் போது, அந்தந்த நாட்டின் பணமாக கொடுத்து வர்த்தகம் செய்து கொள்ளலாம் என்று என்று கூறியிருக்கிறது. அதன் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்க் கொள்முதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த வர்த்தக பரிமாற்றத்தை மேலும் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்ல, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டணிக்கு என பொதுவான கரன்சி மதிப்பை உருவாக்க ரஷ்யா யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கரன்சியின் மதிப்பில் இந்த 5 நாடுகளுக்குள் பணப் பரிமாற்றம் செய்துகொள்ள முடியும். இது டாலரின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று ரஷ்யா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. அதேநேரத்தில், இந்த நாணய மதிப்பை யார் யார் எல்லாம் அச்சடிக்க முடியும்? இதற்கு தலைமை அலுவலகம் எங்கு இருக்கும்? போலி நாணய மதிப்பு நோட்டுகள் வந்தால் அதை எப்படி தடுப்பது? பிரிக்ஸ் அமைப்பில் புதிய நாடுகள் சேர்ந்தால் அவர்களுக்கும் இந்த நாணய மதிப்பு பொருந்துமா? என பல கேள்விகள் இருக்கின்றன. இவையெல்லாம் சாத்தியமாகும் பட்சத்தில் அமெரிக்க டாலருக்கு நிகராக புதிய நாணயத்தின் மதிப்பும் உச்சம் பெறும் என நம்பப்படுகிறது.

The post டாலருக்கு பதில் புதிய கரன்சியா: பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய ஆலோசனை.! சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை குறைக்க அதிரடி appeared first on Dinakaran.

Tags : BRICS conference ,US ,'BRICS' conference ,'BRICS' ,Kazan, Russia ,Modi ,Dinakaran ,
× RELATED நான்கரை ஆண்டாக இருந்த பதற்றம் திடீரென...