டெல்லி : காற்று மாசு குறைவான நகரங்களில் பட்டியலில் திருச்சியின் பல்கலைப்பேரூர் முதலிடம் வகித்துள்ளது. காற்றில் உள்ள மாசை அளவிட காற்று தரக் குறியீடு (AQI) பயன்படுத்தப்படுகிறது. ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, நோய் எதிர்ப்புதிறன் குறைவாக உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருக்கும். 101 முதல் 200 இருந்தால் காற்று மாசு மிதமானதாக நிர்ணயிக்கப்படுகிறது. ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்.
201 முதல் 300 அளவுக்கு சென்றால், காற்றில் மாசு அதிகம். நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும். 301 முதல் 400 வரை மிக அதிகம். சுவாச நோய்கள் ஏற்பட கூடும். 401 முதல் 500 ஏக்யூஐ என்பது மிகவும் மோசமான காற்று மாசு என்று அளவிடப்படுகிறது.ஆரோக்கியமானவர்களை பாதிப்பது மட்டுமன்றி ஏற்கனவே நோயுடன் இருப்பவர்களை தீவிரமாக பாதிக்கும். இந்த நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட காற்று மாசு குறைவான நகரங்களில் பட்டியலில் திருச்சியின் பல்கலைப்பேரூர் முதலிடத்தையும், ராமநாதபுரம் 4ம் இடத்தையும், மதுரை 7ம் இடத்தையும் பிடித்து அசத்தி உள்ளது. இந்த 3 நகரங்களிலும் காற்றின் தரக் குறியீடு 20- 29 ஆக உள்ளது. மிக மோசமான காற்று மாசுக்கொண்ட நகரமாக டெல்லி உள்ளது.
The post காற்று மாசு குறைவான நகரங்களில் பட்டியலில் திருச்சியின் பல்கலைப்பேரூர் முதலிடம் : மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்!! appeared first on Dinakaran.