புதுடெல்லி: அமித்ஷாவின் வெளிநாட்டு பயணம் குறித்த உளவு தகவல் தருவோருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும் என்று காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான். வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் காலிஸ்தான் தீவிரவாத தலைவன் குர்பந்த்வந்த் சிங் பன்னு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெளிநாட்டுப் பயணம் குறித்து உளவுத் தகவல்களை தருவோருக்கு, ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும். மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைவராக உள்ள அமித் ஷா, கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு ஆட்களை அனுப்பி வைத்தார்.
நியூயார்க்கில் அதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டன. இதற்கு அமித் ஷாவே பொறுப்பு. சிஆர்பிஎப் நடத்தும் பள்ளிகளை மாணவர்களும், பெற்றோரும் புறக்கணிக்க வேண்டும். அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் தாக்குதலுக்கு சிஆர்பிஎஃப் பொறுப்பேற்க வேண்டும். மேலும் 1984ல் சீக்கியர்களின் கலவரத்திற்கு சிஆர்பிஎஃப் தான் காரணம். பஞ்சாபின் உயர் போலீஸ் அதிகாரி கேபிஎல் கில் மற்றும் முன்னாள் ரா அதிகாரி விகாஸ் யாதவ் ஆகியோர் பல கலவரங்களுக்கு காரணமானவர்கள் ஆவர்.
பஞ்சாப் மற்றும் வெளிநாடுகளில் சீக்கியர்கள் கொல்லப்பட்டதற்கு அவர்களுக்கு தொடர்பு உள்ளது’ என்னு தெரிவித்துள்ளார். சமீபத்தில் தீவிரவாதி குர்பந்த்வந்த் சிங் பன்னு வெளியிட்ட வீடியோவில், ‘ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம்’ என்று கூறியிருந்தான்.
இதற்கு முன்பும் இதுபோன்ற பல மிரட்டல்களை விடுத்திருந்தான். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி ரோகினியில் உள்ள சிஆர்பிஎப் பள்ளிக்கு அருகே நடந்த குண்டுவெடிப்புக்கு காலிஸ்தான் ஜிந்தாபாத் படை பொறுப்பேற்றுள்ள நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி குர்பந்த்வந்த் சிங் பண்ணுவின் வீடியோ வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post அமித்ஷாவின் வெளிநாட்டு பயணம் குறித்த உளவு தகவல் சொன்னால் ஒரு மில்லியன் டாலர் பரிசு: காலிஸ்தான் தீவிரவாதி மிரட்டல் appeared first on Dinakaran.