×
Saravana Stores

FedEx கூரியர் Scam மூலம் ரூ1.18 கோடி இணைய வழி மோசடி: 7 பேர் கைது

சென்னை: FedEx கூரியர் Scam மூலம் ரூபாய் 1.18 கோடி இணைய வழி மோசடி செய்த 7 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மிகப்பெரிய அளவிலான ஃபெடெக்ஸ் கூரியர் மோசடியில் ஈடுபட்ட ஏழு நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளது. சென்னையில் வசிக்கும் பாதிக்கபட்ட நபர் ஒருவரிடம் தங்களுக்கு FedEx கூரியர் மூலம் தடை செய்யபட்ட பார்சல் வந்துள்ளதாகவும் தாங்கள் மும்பை சைபர் க்ரைம் பிரிவு அதிகாரிகள் பேசுவதாக சொல்லி தாங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ரூ.1.18 கோடி பணத்தை அனுப்ப சொல்லி மிரட்டி மேற்படி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர்.

கடந்த ஆக.2ம் தேதி சென்னையைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவருக்கு ஃபெடெக்ஸ் வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி என்று போலியாக ஏமாற்றிய ஒரு நபரிடமிருந்து அழைப்பு வந்தது. அவர் பாதிக்கபட்டவர் பெயரில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் உள்ள பார்சல் வந்துள்ளதாக சொல்லி அந்த அழைப்பை மும்பை சைபர் கிரைம் அதிகாரி ஒருவருக்கு மாற்றியுள்ளார். அந்த போலி சைபர் கிரைம் அதிகாரி நீங்கள் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க நாங்கள் அனுப்பும் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் இல்லையென்றால் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார்.

இந்த அச்சுறுத்தல்களை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர் அவர் ஏமாற்றபடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பே பல வங்கி கணக்குகளுக்கு ரூ. 1,18,00,000/- பணத்தை அனுப்பியுள்ளார். இது ஒரு ஏமாற்று வேலை என்பதை அறிந்த பின்னர் அவர் NCRP-யில் ஆன்லைன் புகார் அளித்தும், சென்னையில் உள்ள சைபர் குற்றப் பிரிவில் நேரிலும் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், சென்னை சைபர் குற்றப் பிரிவு தலைமையகத்தில் SCCIC- குற்ற στοι. 36/2024, U/s. 318 (4) 319 (2) 336 (3) 340 (2) BNS-2023 & Sec 66 DIT (Amendment)-Act-2008 ன்படி FIR பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணையில் குஜராத்தை சேர்ந்த மோசடி வங்கி கணக்கு துவங்கிய ரமேஷ்பாய் பதபாய் போக்ரா, சைபர் கிரிமினல் நெட்வொர்க்கின் முகவர்களாக மகாராஷ்டிராவை மையமாக கொண்டு செயல்பட்ட விவேக் பெலாடியா தமாஜ்பாய் மற்றும் பரேஷ் நரஷிபாய் கல்சாரியா ஆகியோர்களும் கைது செய்து சிறையில் அடைக்கபட்டனர். மேலும் இந்த குற்ற செயல் செய்த முகவர்களுக்கும் சைபர் குற்றவாளிகளுக்கும் இடைதரகராக செயல்பட்ட குஜராத்தின் கச் மாவட்டத்தைச் சேர்ந்த விபுல் பாகுபாய் கோவதியா என்பவரும் கைது செய்யபட்டார்.

தமிழ்நாடு சைபர் குற்றப் பிரிவு மேம்பட்ட புலனாய்வு தொழில் நுட்பங்கள் மற்றும் பகுப்பாய்வு முறைகளை பயன்படுத்தி இந்த கும்பலின் முக்கிய குற்றவாளிகள் மகாராஷ்டிரா மாநிலம் குர்துவாடியை சேர்ந்த சாஹில் மற்றும் ஷாருக்காவைக் கண்டறிந்து கைது செய்தது. எதிரி சாஹில் OTP, APK File-களை வங்கி கணக்கு வைத்திருக்கும் நபரின் செல்போனில் பதிவேற்றம் செய்து இயக்கி மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் செய்ய உறுதுணையாக இருந்து உள்ளார். ஷாருக்கா அவருக்கு உதவியாக இருந்துள்ளார். இந்த ஒட்டுமொத்த மோசடியும் பங்களாதேஷ் டாக்கா விலிருந்து முக்கிய குற்றவாளிகள் மூலம் இயக்கி செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. தற்போது (Face to Face (F2F). Agents) எதிகள் சாஹில் மற்றும் ஷாருக்கா ஆகியோர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது:-

* பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும்.

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள்.

மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.

சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம்.

உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.

முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும்.

மேலும், பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post FedEx கூரியர் Scam மூலம் ரூ1.18 கோடி இணைய வழி மோசடி: 7 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : FedEx ,Chennai ,NADU ,CYBER CRIME UNIT ,FedEx Courier ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகள்...