×
Saravana Stores

100 நாள் ஆட்சி குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் முதல்வர் சந்திரபாபு நாயுடு எல்லாவற்றிலும் திசை திருப்பும் அரசியல் செய்கிறார்

*முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் குற்றச்சாட்டு

திருமலை : மாநிலத்தில் வளர்ச்சி இல்லாமல் தான் எழும் சர்ச்சைக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு திசை திருப்பும் முயற்சி செய்கிறார் என்று முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் குற்றம்சாட்டி உள்ளார்.ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் குர்லா கிராமத்தில் வயிற்றுபோக்கால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் வெளியே வந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் நிருபர்களிடம் கூறியதாவது: அன்று எங்கள் ஆட்சியில் அனைத்து கிராமங்களும் பசுமையாக இருந்தது. இன்று என்ன நிலை இருக்கிறது என்று மக்களே வித்தியாசம் பார்க்க வேண்டும்.

ஒன்றல்ல, இரண்டல்ல குர்லா கிராமத்தில் வயிற்றுபோக்கால் 14 பேர் ஒரே நேரத்தில் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் சுத்தமான தண்ணீர் இல்லாததால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்தனர். இந்த கிராமத்தைப் பொறுத்தவரை, அக்டோபர் 19ம் தேதி அன்று ஜெகன் என்ற நபர் ட்வீட் செய்யாவிட்டால், இங்கு 14 பேர் இறந்த விவகாரம் வெளியே தெரிந்திருக்காது.

அதே கிராமத்தில் செப்டம்பர் 20 அன்று, அதாவது 35 நாட்களுக்கு முன்பு, அதே மண்டலத்தின் பெனுபர்த்தியில் ஒருவர் இறந்தார். அதுதான் வயிற்றுப்போக்கு முதல் பதிவாகியுள்ளது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. அக்டோபர் 12ம் தேதி முதல் வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தது. குர்லா, கோட்டா குன்றேடு, கோஷாதா, நாகலவலசை கிராமங்களில் வயிற்றுப்போக்கு அதிகமாகி அதனால் 14 பேர் இறந்தனர்.

அக்டோபர் 19 அன்று நான் ட்வீட் செய்யும் வரை அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. அதன் பிறகு அரசு நடவடிக்கை எடுத்ததா என்றால் அதுவும் இல்லை. ஒருவர் மட்டுமே இறந்ததாக கலெக்டர் கூறுகிறார். இறப்பை குறைத்து காண்பிக்க முயன்றனர். அதற்கான முயற்சியை அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொண்டனர்.

பிரச்னை பெரிதாக இருப்பதால் முதல்வர் சந்திரபாபுவும் ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வயிற்றுப்போக்கால் 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.இங்கு வந்த துணை முதல்வர் 10 பேர் இறந்ததாக கூறினார். சரி, இங்கு வந்த பிறகு குறைந்தபட்சம் மக்களிடம் மன்னிப்பு கேட்டு, செய்த தவறை திருத்திக் கொண்டார்களா இல்லை. தண்ணீர் மோசமான நிலையில் உள்ளது.

இந்த மண்டலத்திற்கு சம்பாநதியில் இருந்து வரும் தண்ணீர் சுத்தம் செய்து விநியோகம் செய்தார்களா? இல்லை. அல்லது குறைந்தபட்சம் குளோரினேஷன் பற்றி யோசிக்கவே இல்லை. கிராமத்தில் தூய்மை பணியை செய்ய நினைக்கவில்லை. இந்த மண்டலத்தைப் பொறுத்தவரை, 345 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுமார் 450 பேர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விஜயநகரம் மாவட்டத்தில் கரிவீதி, கஜபதிநகர் மற்றும் தத்திராஜேரு மண்டலங்களில் இன்னும் வயிற்றுப்போக்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பற்றி எண்ணிக்கை சொல்லத் தேவையில்லை.

நிலைமை மிகவும் மோசமாக இருந்தாலும் அரசு என்ன செய்கிறது? குறைந்தபட்சம் மக்கள் கவலையை பொருட்படுத்தவில்லை. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், சிக்கலை எவ்வாறு திசை திருப்புவது? எப்படி மறைப்பது? அது நடக்கவில்லை என்று எப்படிக் காட்டுவது என்பதில் தான் அரசாங்கம் சிந்திக்கிறது. அதற்காக அரசுத் தலைவர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

இது குர்லா கிராமத்தில் 9 பேர் இறந்த நிலையில் மண்டலத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்ட தலைநகரம் இங்கிருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது. ஏன் விஜயநகரத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியவில்லை. விசாகப்பட்டினம் இங்கிருந்து 80 கி.மீ தொலைவில் உள்ளது. ஏன் 10 ஆம்புலன்ஸ்களை ஏற்பாடு செய்து, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களை சிறந்த சிகிச்சைக்காக அழைத்துச் செல்லக்கூடாது?

வயிற்றுப்போக்கு நோயாளிகளுக்கு அன்று எங்கள் அரசு ஏற்பாடு செய்து பள்ளி மறுசீரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. நோயாளிகள் பெஞ்சுகளில் படுக்க வைக்கப்பட்டனர். பள்ளிகளில் சிகிச்சை அளிக்கும் நிலை இதுதான் இவர்கள் ஆட்சி. எங்கள் ஆட்சிக் காலத்தில் இங்கு மருத்துவக் கல்லூரியும் நிறுவப்பட்டது.நோயாளிகளை 17 கி.மீ தொலைவில் உள்ள விஜயநகரத்திற்கும், 80 கி.மீ தொலைவில் உள்ள விசாகப்பட்டினத்திற்கும் நோயாளிகள் மாற்றப்படாததால் கிராமத்தில் 9 பேர் இறந்தனர், மண்டலத்தில் 14 பேர் இறந்தனர். இது மோசமானது. இதற்கு அரசு பொறுப்பல்லவா? இறுதியில் இறந்தவர்களுக்கு அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை.

மார்ச் முதல் ஆரோக்கியஸ்ரீ காப்பீட்டு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. இதனால், சுமார் ₹1800 கோடி நிலுவை தொகை வராததால் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க முன் வரவில்லை. சிறந்த மருத்துவ சேவையை வழங்குவதற்காக ஒரே நேரத்தில் 17 மருத்துவக் கல்லூரிகளை எங்கள் அரசு தொடங்கியுள்ளது. அவற்றில் 5 கல்லூரிகளை கடந்த ஆண்டு தொடங்கினோம்.

மீதியுள்ள 12 மருத்துவக் கல்லூரிகளை முடித்து இயக்க வேண்டிய அரசு, 5 கல்லூரிகளில் சீட் ஒதுக்கினாலும் நடத்த முடியாது என்று கடிதம் எழுதியுள்ளது. அதன்பிறகு, இந்த 12 மருத்துவக் கல்லூரிகளைத் தவிர, கடந்த ஆண்டு தொடங்கிய 5 மருத்துவக் கல்லூரிகள், மொத்தம் 17 மருத்துவக் கல்லூரிகள்.

தங்களை சார்ந்தவர்களுக்கு விற்க மோசடிகளில் ஈடுப்படுகிறார்கள். எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளும் கட்சியில் இருந்து நாங்கள் எப்போதும் மக்களுக்கு துணையாக இருப்போம். வயிற்றுப்போக்கால் இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹2 லட்சம் நிதியுதவி வழங்குவோம். எதிர்க்கட்சியில் இருந்தாலும் முன்னோக்கி வந்துள்ளோம்.

அதிகாரத்தில் இருப்பது அதிகப் பொறுப்பைக் குறிக்கிறது. மேலும் நீங்கள் எவ்வளவு கொடுக்கப் போகிறீர்கள் என்று அரசு சொல்ல வேண்டும் என நேரடியாகக் கேட்கிறேன். திசை திருப்பும் அரசியலை சந்திரபாபு நிறுத்துங்கள், உண்மைகளை மக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த அரசுக்கு புத்தி வரணும்னு கடவுளை வேண்டிக்கிறேன். விஜயவாடா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சிரமப்பட்ட நிலையில் நூறு நாள் சாதனைகள் கூற ஒன்னும் இல்லாததால் திருப்பதி லட்டு விவகாரத்தை கொண்டு வந்து திசை திருப்பினர். பெண்கள் மற்றும் மைனர் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் அதனை திசை திருப்பும் விதமாக செயல்படுகிறார்கள்.

தற்பொழுது வயிற்றுப்போக்கு பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்திக்க செல்லக்கூடிய நிலையில் எனது தங்கை மற்றும் எனது தாயார் புகைப்படங்களை வைத்து குடும்ப பிரச்சனையை பூதாகரமாக சித்தரிக்கிறார்கள். இது அனைத்து குடும்பத்திலும் நடக்கும் சாதாரணமான விவகாரம். ஏதேனும் ஒரு பிரச்னை வந்தால், அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அரசு பதில் அளிக்காமல், பிரச்னையை திசை திருப்ப நடவடிக்கை எடுக்கிறது.

இந்த அரசுக்கு எதிராக டெல்லியில் தர்ணா நடத்தினால், அன்று மதனப்பள்ளியில் தீ விபத்து என்று கூறி டிஜிபி மற்றும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அனுப்பி வைத்தனர்.
இங்கு 14 பேர் இறந்தால் அந்த ஹெலிகாப்டர் அல்ல குறைந்த பட்சம் அமைச்சர்கள் கூட வந்து பார்க்கவில்லை.

இந்த அரசு அமைந்து 100 நாட்கள் ஆகிறது. சூப்பர்சிக்ஸ் தேர்தலுக்கு முன் சொன்னது. தேர்தலுக்கு முன் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சிறு குழந்தைகளை பார்த்தால் ₹15 ஆயிரம், அந்த குழந்தைகளின் தாய்மார்களை பார்த்தால் ₹18 ஆயிரம், அந்த வீட்டில் உள்ள குழந்தைகளின் பாட்டிகளை பார்த்தால் ₹48 ஆயிரம் அந்த வீட்டில் உள்ள 20 வயது இளைஞரை பார்த்தால் ₹36 ஆயிரம், இளம் பெண்களை பார்த்தால் ₹20 ஆயிரமும் என கூறினார்கள்.

ஆனால் மக்கள் நம்பி ஏமாந்தும் 100 நாள் ஆட்சியில் இதையெல்லாம் மக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்பார்கள் என்பதால் அதனை திசை திருப்பும் அரசியல் செய்து வருகிறார்கள். எந்த ஒரு கஷ்டம் வந்தாலும், மக்கள் பக்கம் நிற்க வேண்டிய ஒவ்வொரு சூழ்நிலையிலும் சந்திரபாபு தப்பிக்கப் பார்க்கிறார்.
எல்லாவற்றிலும் திசைதிருப்பல். அதுதான் சந்திரபாபுவின் அரசியல். இவ்வாறு அவர் கூறினார்.

The post 100 நாள் ஆட்சி குறித்து மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால் முதல்வர் சந்திரபாபு நாயுடு எல்லாவற்றிலும் திசை திருப்பும் அரசியல் செய்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chandrababu Naidu ,Former ,Principal ,Jehanmohan ,Chief Minister ,AP ,STATE ,VIJAYANAGARAM ,KURLA VILLAGE ,
× RELATED ஆந்திராவுக்கு இருண்டகாலம்: சொல்கிறார் ஜெகன்மோகன்