செஞ்சி : செஞ்சி அருகே அமைந்துள்ளது கப்பை கிராமம். சரவணகுமார் என்பவர் அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தைச் சேர்ந்த எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், செஞ்சி நூலகர் பூவழகன் ஆகியோர் இங்கு கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. இதுகுறித்து ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, கப்பை கிராமத்திலுள்ள மலைப் பகுதியில் ஆய்வு செய்தபோது குகைத்தளத்தில் தொல்பழங்கால ஓவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டன.
மனிதன் மற்றும் விலங்கின உருவங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பெரும்பாலான ஓவியங்கள் வெள்ளை நிறத்தில் வரையப்பட்டுள்ளன. சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங்கள் ஆங்காங்கே மங்கலாகத் தெரிகின்றன. ஒரு மனிதன் தனது இரண்டு கைகளையும் தூக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஓவியம் சிறப்பானது. மேலும் இந்த ஓவியத் தொகுப்பில் காவி நிறத்தில் இடம்பெற்றுள்ள கை ஓவியம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் காணப்படும் இத்தகைய ஓவியம், தமிழ்நாட்டில் விழுப்புரம் அருகே ஆலம்பாடி பாறை ஓவியங்களில் இடம்பெற்றுள்ளது. கப்பை கிராமத்தில் உள்ள பாறை ஓவியங்கள் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அக்கால மக்களின் வாழ்வியல், பண்பாட்டை நமக்குச் சொல்பவை. இங்குள்ள பெரும்பாலான ஓவியங்கள் மங்கி மறைந்து போய்விட்டன. எஞ்சி இருக்கும் ஓவியங்களைப் பாதுகாக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
The post செஞ்சி அருகே பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.