சுரண்டை, அக்.25: வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் ஒன்றிய கவுன்சிலர் சேக் முகம்து கோரிக்கை மனு அளித்தார். மனு விவரம்: வீராணத்தில் கடந்த 2011ம் ஆண்டு தனிநபர் வழங்கிய 5 ஏக்கர் இடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அப்போதைய முதல்வர் கலைஞரால் தொடங்கப்பட்டது. இதில் வீராணம் மற்றும் சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால் பயனடைந்து வருகிறார்கள். ஒருமாதத்தில் சுமார் 10 முதல் 20 பிரசவம் வரை நடைபெறுகிறது.
அதிகமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வருவதால் கூடுதல் ஊசி, மருந்துகள் வழங்க வேண்டும். இரவு நேரங்களில் அவசர சிகிச்சை மற்றும் விபத்து போன்ற முதலுதவி சிகிச்சை செய்ய மருத்துவர்கள் இல்லாததால் முதலுதவி சிகிச்சை பெற முடியாமல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே சுமார் ஐந்து ஏக்கர் நிலம் இருப்பதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
The post வீராணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் அமைச்சரிடம் ஒன்றிய கவுன்சிலர் கோரிக்கை appeared first on Dinakaran.