×
Saravana Stores

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று முதல் ஆண்டிலேயே அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவ, மாணவியர் மற்றும் 1 பயிற்றுநர் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதல்வர் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தொழிற்பயிற்சி நிலையங்களுக்கான அகில இந்திய தொழிற் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது.

2023-2024-ஆம் கல்வியாண்டு தேர்வு 12.08.2024 முதல் 9.09.2024 வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 45,333 மாணவ மாணவியர் பங்கேற்றனர். தேர்வில் 41,591 (91.74%) மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே இன்டஸ்டிரியல் ரோபோடிக் தொழிற் பிரிவில் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவன் அந்தோணிசேசுராஜ் மற்றும் திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி மோகன பிரியா ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மெனுபேக்சரிங் பிராஸஸ் கன்ட்ரோல் அன்ட் ஆட்டோமேஷன் தொழிற் பிரிவில் சிதம்பரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவி பிரசிதா மற்றும் வேப்பலோடை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயின்ற மாணவர் மணிமுருகன் ஆகியோர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர். இன்பர்மேஷன் டெக்னாலஜி தொழிற்பிரிவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), கோயம்புத்தூரை சார்ந்த செல்வி இந்துஸ்ரீ அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மேலும் நவீனகால தொழிற்பிரிவுகள் உட்பட பல்வேறு தொழிற் பிரிவுகளிலும் தமிழ்நாட்டை சேர்ந்த 29 மாணவ மாணவியர் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

பயிற்றுநர்களுக்கான பயிற்சியில் (சிஐடிஎஸ்) பயிற்சி பெற்ற காட்டுமன்னார்கோவில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தை சேர்ந்த பயிற்றுர் ஸ்வேதா, வெல்டர் தொழிற்பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
இவ்வாறு, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 29 மாணவ மாணவியரும் மற்றும் 1 பயிற்றுநரும் தமிழ்நாடு முதலமைச்சரை நேற்றைய தினம் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்ச்சியில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் வீரராகவராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் விஷ்ணுசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று அகில இந்திய தொழிற்தேர்வில் முதலிடம் பெற்ற 29 மாணவர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,All ,Government Vocational Training Institutes ,M.K.Stalin ,Tamil Nadu Government ,All India Vocational Examination ,Dinakaran ,
× RELATED விளையாட்டுத் துறையில் உலகத்தையே...