×
Saravana Stores

லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏஓவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செங்கல்பட்டு: பட்டாவில் சர்வே எண் மாற்றித்தர ரூ2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏஓவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த சட்ராஸ் மெய்யூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் முருகேசன். இவர் வசித்து வரும் வீட்டுக்கு வழங்கப்பட்ட பட்டாவில் சர்வே எண் தவறாக பதிவிட்டுள்ளது. அதனை மாற்றி தருமாறு கடந்த 2010ம் ஆண்டு மே 25ம் தேதி அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கன்னியப்பன் என்பவரை அவர் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலகத்தில் சந்தித்து தவறாக பதிவிட்ட சர்வே நம்பரை மாற்றி சரியான சர்வே நம்பரை பதிவேற்றம் செய்து தருமாறும் அதிலும், விரைவாக தேவைப்படுகிறது என முருகேசன் கூறியுள்ளார்.

விஏஓ கன்னியப்பன் நான் உடனடியாக சர்வே நம்பரை மாற்றித்தருகிறேன். 28.5.2010 அன்று அலுவலகத்திற்கு வந்து ரூ2ஆயிரம் கொடுத்துவிட்டு சர்வே எண் திருத்தப்பட்ட பட்டாவை பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால், லஞ்சப்பணத்தை கொடுக்க விருப்பமில்லாத முருகேசன் சென்னை மாநகர ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு (பிரிவு-1) அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பொறிவைப்பு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டு கன்னியப்பன் கேட்டதுபோல முருகேசன் சட்ராஸ் மெய்யூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் வைத்து விஏஓ கன்னியப்பனிடம் ரூ2ஆயிரம் பணம் கொடுக்கும்போது அந்த பணத்தை பெற்றுக்கொண்ட கன்னியப்பனை கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்து வழக்கு பதிவிட்டு சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கின் புலன் விசாரணை முடிந்து கன்னியப்பன் மீது செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த தலைமை குற்றவில் நீதித்துறை நடுவர் மற்றும் தனி நீதிபதி செங்கல்பட்டு ஜெயஸ்ரீ குற்றம் சாட்டப்பட்ட விஏஓ குற்றவாளி என அறிவித்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post லஞ்சம் வாங்கிய வழக்கில் விஏஓவிற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chief Criminal Arbitration Court ,VAO ,Patta ,Chengalpattu District ,Kalpakkam ,Chatras Meiyur ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டில் சாலை பாதுகாப்பு...