×

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பாராமதியில் இந்தமுறை சித்தப்பா, மகன் மோதல்: சரத்பவார் குடும்பத்தில் அடுத்த சண்டை

புதுடெல்லி: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் அஜித் பவாரை எதிர்த்து அவரது தம்பி மகன் சரத்பவார் அணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே அணி) மற்றும் பாஜ ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி போட்டியிடுகின்றன.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ்(சரத் சந்திர பவார், சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் கூட்டணி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் 45 வேட்பாளர்களைக் கொண்ட கட்சி தனது முதல் பட்டியலை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இதில் பாராமதி சட்டப்பேரவை தொகுதியில் யுகேந்திர பவார் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் தம்பி ஸ்ரீனிவாசின் மகன் ஆவார். இதே தொகுதியில் தான் அஜித்பவார் போட்டியிடுவதால் இந்த முறை சித்தப்பா-மகன் மோதலாக மாறியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாராமதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலேயும், அஜித்பவார் மனைவி சுனேத்திராவும் போட்டியிட்டனர். இதில் அண்ணியான சுப்ரியா சுலே வெற்றி பெற்றார்.

* அஜித்பவார் அணிக்கு கடிகார சின்னம்
தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுப்படும் முன் இருந்த கடிகார சின்னத்தை பயன்படுத்துவது குறித்து இரு கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் சரத்பவார் தலைமையிலான குழுவும், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான குழுவும் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், திபங்கர் தத்தா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரவை தேர்தலில் அஜித் பவார் அணி கடிகார சின்னத்தை பயன்படுத்த இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.  மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், “தேர்தல் நிறைவடையும் வரை உச்ச நீதிமன்ற உத்தரவை நீங்கள்(அஜித் பவார் அணி) மீற மாட்டீர்கள் என்ற உறுதிமொழி பத்திரத்தை நவம்பர் 4ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை நீங்கள் மீறுவதை கண்டறிந்தால் நாங்களாக முன்வந்து விசாரணை நடத்துவோம்” என தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

The post மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பாராமதியில் இந்தமுறை சித்தப்பா, மகன் மோதல்: சரத்பவார் குடும்பத்தில் அடுத்த சண்டை appeared first on Dinakaran.

Tags : Maharashtra Assembly Elections Baramati ,New Delhi ,Sarath Pawar ,Ajit Pawar ,Maharashtra Assembly elections ,Maharashtra ,Ajith ,Maharashtra Assembly ,Baramati ,Sarathpawar ,Dinakaran ,
× RELATED டிரோன் எதிர்ப்பு வெடிபொருள் தயாரிக்க விண்ணப்பம் வரவேற்பு