×
Saravana Stores

டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து, பட்டாசு கிடங்குகளுக்கு சீல்வைக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காற்று மாசு காரணமாக பட்டாசு விற்க டெல்லி அரசு விதித்த தடைக்கு எதிராக பட்டாசு உரிமம் வைத்துள்ளவர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டது. டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மேலும் அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக, உடல்நல அபாயங்கள் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வயதானவர்கள் மற்றும் சுவாசக் கோளாறு பிரச்னை உள்ளவர்கள் இந்த காற்று மாசால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்லியின் மோசமான காசு மாசுபாட்டிற்கு, அண்டை மாநிலங்களில் பயிர் கழிவு எரிப்பு, தடையை மீறி பட்டாசு வெடிப்பது போன்றவை காரணமாக பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தில் ஹரியானாவில் 19.8%, பஞ்சாபில் 28.7% பயிர் கழிவு எரிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

மோசமான காற்றின் தரம் காரணமாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு அனைத்து வகையான பட்டாசுகள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி வரை முழுமையான தடையை ஏற்கனவே விதித்துள்ளது. ஆனால் பல்வேறு பண்டிகைகள் காரணமாக தடையை மீறி மக்கள் பட்டாசு வெடிப்பது வாடிக்கையாக உள்ளது. இதனால் காற்று மாசும் அதிகரித்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு, மாசு அளவு இன்னும் அதிகரிக்கும்.

இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த வேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த சூழலில், மாசு கட்டுப்பாட்டு குழுவின் உத்தரவை எதிர்த்து பட்டாசு உரிமம் வைத்துள்ளவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி அரசின் உத்தரவை உறுதி செய்து ஆணையிட்டது. மேலும், ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு வைத்துள்ள அனைத்து கிடங்குகளையும் சீல் வைக்க வேண்டும் என்றும் டெல்லி அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post டெல்லியில் அடுத்தாண்டு ஜன. 1ம் தேதி வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Delhi High Court ,Delhi government ,Dinakaran ,
× RELATED காங். முன்னாள் எம்பி விடுதலையை...