- மேயர்
- பிரியா
- விக்டோரியா பொது மண்டபம்
- சென்னை
- விக்டோரியா பப்ளிக் திரையரங்கு
- விக்டோரியா மகாராணி
- இங்கிலாந்து
- விக்டோரியா
சென்னை: விக்டோரியா பொது அரங்கம் சென்னையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கட்டடமாக திகழ்கின்றது. இக்கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவின் பெயரால் பெயரிடப்பட்ட சிறப்பு வாய்ந்த கட்டடமாகும்.
மேலும், சென்னை மாநகரின் கட்டடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாகவும், விக்டோரியா ராணி ஆட்சியின் பொன் விழாவை நினைவு கூறும் வகையிலும் அமைக்கப்பட்ட இக்கட்டடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ராபர்ட் சிசோல்ம் என்பவரால் இந்தோ சாரசெனிக் கட்டடக்கலையில் நம்பெருமாள் செட்டியாரால் 1888ஆம் ஆண்டு இந்த அரங்கம் கட்டப்பட்டது.
வரலாற்று சிறப்புமிக்க, தொன்மை வாய்ந்த விக்டோரியா பொது அரங்கினை அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியினை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு, நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதனடிப்படையில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் அதன் தொன்மை மாறாமல் புனரமைத்து, மறுசீரமைக்கும் பணியானது 20.03.2023 அன்று தொடங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இரண்டு மாடி கொண்ட இக்கட்டடத்தின் நீளம் 48 மீட்டர், அகலம் 24 மீட்டர், பிரதானக் கூரையின் உயரம் 19 மீட்டர் மற்றும் மொத்த கோபுரத்தின் உயரம் 34 மீட்டர் ஆகும். தற்பொழுது இந்த விக்டோரியா பொது அரங்கின் முழுக் கட்டடத்தையும் அதன் தொன்மை மாறாமல் பழுது பார்க்கும் பணிகள், நில அதிர்வினை தாங்கும் வகையில் மறுசீரமைப்பு பணிகள், முழு கூரையினையும் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், வெளிப்புறம் மற்றும் உட்புறம் மரத்தளம் மற்றும் மரப்படிக்கட்டுகளுடன் மறுசீரமைப்பு செய்யும் பணிகள், ஏற்கனவே உள்ள கட்டடத்தை தற்போதைய பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் உள்ளிட்ட மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மறுசீரமைக்கும் பணியினை மேயர் ஆர்.பிரியா இன்று (24.10.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விக்டோரியா பொது அரங்கில் மேற்கொள்ளப்படும் பணிகள், கட்டடத்தின் உறுதித்தன்மை மாறாமல் மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட விவரங்களை மேயர் கேட்டறிந்து ஆய்வு செய்தார். இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி மேற்கொண்டு குறித்த காலத்தில் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மேற்பார்வை பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) பி.வி.பாபு மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post விக்டோரியா பொது அரங்கு மறுசீரமைப்பு பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் பிரியா appeared first on Dinakaran.