பழநி: பழநி கோயில் ராஜகோபுரத்தின் வலது புறத்தில் சேதமடைந்த யாழி சிலை சீரமைக்கப்பட்டு இன்று காலை இலகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்களும், முக்கிய விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து தரிசனம் செய்கின்றனர். கோயிலில் கடந்த 2023 ஜன.27ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ராஜகோபுரம், நிழல் மண்டபங்கள் உள்ளிட்டவை புனரமைப்பு செய்யப்பட்டன.
இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன் ராஜகோபுரத்தின் வலது புறம் உள்ள யாழி சிலையின் பின்பகுதி சுதை திடீரென உடைந்தது. கோயிலில் இருக்கும் குரங்குகள் கோபுரத்தில் விளையாடும்போது, யாழி சிலை சுதை உடைந்திருக்கலாம் என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த வாரம் ராஜகோபுரத்தில் சாரம் கட்டப்பட்டு, ஆகம விதிப்படி யாழி சிலை மற்றும் சேதமடைந்த சிற்பங்களும் சீரமைக்கப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று (வியாழன்) காலை ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையொட்டி புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தக் கலசத்தை வைத்து கடந்த 2 நாட்களாக 4 கால யாக பூஜைகள் செய்யப்பட்டன. இன்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் சிவாச்சாரியர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. பின், காலை 5 மணிக்கு மேல் 5.45 மணிக்குள் கோயில் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
The post பழநி கோயில் ராஜகோபுரத்திற்கு இன்று இலகு கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.