டெல்லி: வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது. பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்றிரவு முதல் நாளை காலைக்குள் தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலையில் புயலாக (டானா) மாறியது. அத்துடன் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலையில் வட மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்து தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
இதையடுத்து, வடக்கு ஒரிசா- மேற்கு வங்க கடற்கரைப் பகுதிகளில் பூரி-சாகர் தீவுகளுக்கு இடையே இன்று இரவு தொடங்கி நாளை காலை வரை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அப்போது காற்றின் வேகம் மணிக்கு 100 கிமீ வேகம் முதல் 110 கிமீ வேகத்திலும் இடையிடையே 120 கிமீ வேகத்திலும் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post வங்கக் கடலில் உருவான ‘டானா’ புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது appeared first on Dinakaran.