×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; கோயம்பேடு மார்க்கெட்டில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி தீவிரம்: அங்காடி நிர்வாக அதிகாரி ஆய்வு

அண்ணா நகர்: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி மற்றும் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் நேரில் ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டில் தூர் வாரும் பணிகள் மற்றும் மழைநீர் வெள்ளம் தேங்காதவாறு பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகள் குறித்து நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேரில் ஆய்வு செய்து பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதேபோல், கடந்த வாரம் பெய்த கனமழையால் கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. அங்காடி நிர்வாகம் சார்பில் தனி குழு அமைத்து கோயம்பேடு மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர் மற்றும் கழிவுநீரை துரிதமாக அகற்றினர். சில இடங்களில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த பணிகளையும் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் ஆய்வு செய்தார்.

இதுகுறித்து அங்காடி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக தூர்வாரும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதேபோல், மழை காலங்களில் மழைநீர் தேங்காதவாறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மழைநீர் தேங்கினாலும் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டாலும் வியாபாரிகள் அங்காடி நிர்வாக அலுவலகத்தை அணுகி புகார் மனு கொடுக்கலாம். அதன் அடிப்படையில் உடனடியாக பணிகள் செய்யப்படும். பருவமழை முன்னெச்சரிக்கையாக தனி குழு அமைத்துள்ளோம், வியாபாரிகள் அச்சமின்றி வியாபாரம் செய்யலாம்’’ என்றனர்.

The post பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; கோயம்பேடு மார்க்கெட்டில் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணி தீவிரம்: அங்காடி நிர்வாக அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : MONSOON ,COIMPEDU ,ANNA NAGAR ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை இன்றுடன் நிறைவு:...