வேலூர், அக்.24: அரசு பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம் நாளை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளிலும் 2024-26ம் கல்வியாண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விவரங்கள் பள்ளி வாரியாக எமிஸ் தளத்தில் 90 சதவீதம் பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எஸ்எம்சி குழுக்களுக்கான முதல் கூட்டம் அக்டோபர் 25ம் தேதி(நாளை) 3 மணி முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். புதிய உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். அதேபோல் அந்த உறுப்பினர்கள் இடம்பெறும் வகையில் வாட்ஸ் ஆப் குழுவை பள்ளியளவில் தலைமை ஆசிரியர் உருவாக்க வேண்டும். முதல் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப்பொருள் குறித்து உறுப்பினர்களுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். எஸ்எம்சி குழுக்களுக்கு வழிகாட்டுதல் வழங்கவும் தலைமைச் செயலர் தலைமையிலான மாநில கண்காணிப்புக் குழு மற்றும் ஆட்சியர் தலைமையிலான மாவட்ட கண்காணிப்புக் குழு குறித்து புதிய உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
The post அரசு பள்ளிகளில் நாளை எஸ்எம்சி கூட்டம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.