இந்தியாவுக்கும் சீனாவுக்கு இடையே போர் நடந்து 62 ஆண்டுகள் ஆகிவிட்டது. 1962ல் நடந்த அந்த பயங்கர போர் இரு நாடுகளுக்கு ஒரு மாதமே நீடித்தாலும் அதன் பாதிப்பு இன்று வரை நீடிக்கிறது. போரைத் தொடர்ந்து இந்தியா- சீனா உறவு அதலபாதாளத்துக்கு சென்றது. இந்தியாவின் ஜென்ம விரோதியாக மாறிப்போனது சீனா. இந்த நிலை மாறி உறவு மீண்டும் துளிர்க்க 30 ஆண்டுக்கு மேலாகிப்போனது வரலாறு. தொடர் பேச்சுவார்த்தை காரணமாக 1993 மற்றும் 1996ல் போடப்பட்ட ஒப்பந்தங்களால் எல்லையில் ஓரளவுக்கு அமைதி திரும்பியது. எல்லையில் மோதல்கள் குறைந்தன. இருதரப்பிலும் உயிர் பலியும் நின்றது.
ஆனாலும், எல்லையில் பதற்றம் நீரு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தது. 2013,2014 மற்றும் 2017ல் எல்லையில் சீனா அத்துமீறிய சம்பவங்கள் அந்த நாடு மீது இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தின. இந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் இந்திய – சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதே ஆண்டு ஜூன் 19ம் தேதியில் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்; 40க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் கொல்லப்பட்டனர்.
கல்வான் மோதலுக்கு பிறகு சீன எல்லையில் பதற்றம் அதிகரித்து காணப்பட்டது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பு மூத்த ராணுவ அதிகாரிகள் மத்தியில் 4 ஆண்டுகளாக பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இரு நாடுகளும் நிலை நிறுத்தி வைத்திருந்த எல்லைக்கே மீண்டும் சென்று விட வேண்டும் என்று புதிய ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது. இந்தியாவை எப்போதும் சீண்டி பார்ப்பதிலேயே ஆர்வமாக இருக்கும் சீனாவின் இந்த திடீர் மனமாற்றம் உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு துவங்குவதற்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு உலகம் முழுவதும் நிலவும் அச்சுறுத்தல்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் நடக்கும் போர்களுக்கு மத்தியில் முக்கியமானதாக உள்ளது. கல்வான் தாக்குதல் சம்பவத்தால் பிரதமர் மோடிக்கும் சீன அதிபருக்கும் இடையே சந்திப்பு நடந்தே 5 ஆண்டு காலம் ஆகிவிட்டது. 2019ல் பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டில்தான் கடைசியாக இரு தலைவர்களும் சந்தித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி -சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே ரஷ்யாவில் நேற்று இருதரப்பு சந்திப்பு நடந்துள்ளது. எல்லையில் பதற்றம் தணிக்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இரு தலைவர்களும் சந்தித்தது ஆச்சர்ய அலையை ஏற்படுத்தி உள்ளது. மோடி- ஜி ஜின்பிங் சந்திப்பால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை சீரடையச் செய்யுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சந்திப்புக்கு ரஷ்ய அதிபர் புடின் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. ரஷ்யா – சீனா – இந்தியா இடையிலான உறவு மேம்பட வேண்டும் என்றும், அதன்மூலம் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்று புடின் விரும்புகிறார். உக்ரைன் – ரஷ்யா போர், இஸ்ரேல் – காசா – லெபனான் – ஈராக் இடையிலான போர், காலிஸ்தான் அமைப்பினரை முன்வைத்து கனடாவுடனான இந்திய உறவு சிக்கல் உள்ளிட்ட விவகாரங்கள் சர்வதேச அளவில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. கனடாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுத்துள்ள நிலையில், சீனாவுடன் இந்தியா இணக்கமாவது மேற்கத்திய சக்திகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
* அதிர்ச்சியில் ஐந்து கண்கள்
இந்தியா – கனடா மோதலில் ‘ஃபைவ் ஐஸ்’ உளவுக்குழுவானது இந்தியாவிற்கு எதிரான விசாரணையை கண்காணித்து வருகிறது. அதாவது ஐந்து கண்கள் என்று கூறப்படும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உளவுத்துறை கூட்டணியாகும். ரஷ்யாவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியாவுடன் சீனா நெருங்குவது இந்த ஐந்து கண்கள் உளவுக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post ரஷ்யாவில் ஏற்பட்ட திருப்பம் சீரடைகிறதா இந்தியா-சீனா உறவு? எல்லையில் பதற்றம் தணிகிறது appeared first on Dinakaran.