புதுடெல்லி: மது ஆலை உற்பத்தி, விநியோகம், தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் உற்பத்தி தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது. இதில் மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் 7வது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி, விநியோகம், கொள்முதல், விற்பனை ஆகியவற்றில் சட்டமியற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதுதொடர்பான வழக்கை விசாரித்து மது உற்பத்தி, தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட பல மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், அபய் எஸ் ஓகா, ஜேபி பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சர்மா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பு வழங்கினர். இதில் தலைமை நீதிபதி சந்திரசூட் உள்பட 8 நீதிபதிகள் மதுஉற்பத்தி தொடர்பான அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது. இதில் புதிய சட்டங்களை இயற்ற நாடாளுமன்றம் தலையிட முடியாது என்று தீர்ப்பு வழங்கினர். ஆனால் நீதிபதி நாகரத்னா மட்டும் இந்த தீர்ப்பில் இருந்து விலகி, தொழிற்சாலை மது அல்லது டீனேச்சர்ட் ஸ்பிரிட் ஆகியவற்றை ஒழுங்குபடுத்த சட்டமியற்றும் தகுதியை மாநிலங்களுக்குக் கொண்டிருக்கவில்லை. எனவே ஒன்றிய அரசுக்குத்தான் இந்த அதிகாரம் உள்ளதாக தெரிவித்தார்.
The post மதுஆலை உற்பத்தி கொள்கை மாநில அரசுகளுக்கே அதிகாரம்: நாடாளுமன்றம் தலையிட முடியாது; உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.