சென்னை: சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2019ன்படி, 5000 சதுர மீட்டருக்கு மேல் பரப்பளவு கொண்ட அல்லது நாளொன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் திடக்கழிவுகளை உற்பத்தி செய்யும் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்கள், சந்தை சங்கங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் சேகரமாகும் திடக்கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இக்கழிவுகளை தனித்தனியாக சேகரித்து, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை சென்னை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட குப்பை சேகரிப்பாளர்களிடம் அல்லது மறுசுழற்சி செய்பவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மக்கக்கூடிய கழிவுகள் முடிந்தவரை தங்களது வளாகத்திற்குள்ளாகவே உரமாக்கல் அல்லது பயோ-மெத்தனேஷன் முறையில் பதப்படுத்தி அகற்றப்படல் வேண்டும்.
மேற்கூறியவாறு, பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள், தங்களின் வளாகங்களில் உற்பத்தியாகும் திடக்கழிவுகளை தங்களின் வளாகத்திற்குள்ளாகவே பதப்படுத்தி செயல்முறைப்படுத்தவும், அவ்வாறு இயலாத பட்சத்தில் கழிவுகளை அகற்ற மாநகராட்சியால் அங்கீகாரம் பெற்ற குப்பை சேகரிப்பாளர்களிடம் அல்லது மறுசுழற்சி செய்பவர்களிடம் ஒப்படைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் வீட்டுக் கழிவுகளை சேகரிப்பதற்காக தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் குப்பைகளை கொட்ட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மையை சரியாக பின்பற்றாமல் விதிமீறல்களில் ஈடுபடும் பெருமளவு திடக்கழிவு உற்பத்தியாளர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி ரூ.5000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post திடக்கழிவுகள் அகற்றுவதில் விதிமீறினால் ரூ.5,000 அபராதம்: சென்னை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.