ஊட்டி: ஊட்டி அருகே உள்ள உல்லத்தி கிராமத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னெடுப்பில் காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் ‘பசுமை நீலகிரி 2024’ திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவது என திட்டமிடப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகே உள்ள உல்லத்தி கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் மரம் நடுவதற்கான இடத்தை தேர்ந்தெடுத்து மரக்கன்றுகள் தேவை என வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் படி ஊட்டி வடக்கு வனச்சரகர் ஆயிரம் மரக்கன்றுகளை உல்லத்தி கிராம மக்களுக்கு வழங்கினார். இந்த ஆயிரம் நாற்றுக்களை ஊர் தலைவர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குண்டன், ஓய்வு பெற்ற ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும் ஊர் பொதுமக்கள் பெற்றுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து நேற்று கிராமத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளரும், சுமை விருது பெற்றவருமான ஓய்வு பெற்ற ஆசிரியர் கே.ஜே.ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக உல்லத்தி அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் ஓடைகாடு நடுநிலைப் பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. ஓடைக்காடு பள்ளியில் தலைமையாசிரியை சோபா தலைமை ஏற்று மரக்கன்றுகளைப் பெற்றுக் கொண்டார். இதில், மாணவர்களுக்கு காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post ஊட்டி அருகே ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம் appeared first on Dinakaran.