×

இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கனடா பிரதமரின் மற்றொரு பொய் அம்பலமானது

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கனடா பிரதமரின் மற்றொரு பொய் அம்பலமானது. ரிபுதமன் சிங் கொலை குற்றவாளிகள் தாங்கள் தான் அவரை கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்து வரும் நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மற்றொரு பொய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி கொலம்பியா அடுத்த சர்ரேயில் காலிஸ்தான் ஆதரவாளர் ரிபுதமன் சிங் மாலிக் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல கொலை வழக்கு, குண்டுவெடிப்பு வழக்குகள் உள்ளன. ரிபுதமன் சிங் மாலிக் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் கூறியிருந்தார். ஆனால் ரிபுதமன் சிங்கைக் கொன்றது தாங்கள்தான் என்பதை குற்றவாளிகள் இருவரும் தற்போது நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளனர்.

கனடா உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது குற்றவாளிகளான டேனர் ஃபாக்ஸ், ஜோஸ் லோபஸ் ஆகிய இருவரும், ரிபுதமன் சிங் மாலிக்கை கொன்றது தாங்கள் தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இவர்களின் வாக்குமூலத்தின் மூலம் ரிபுதமன் சிங் மாலிக் கொலைக்கு இந்தியாவை குற்றம்சாட்டிய கனடா பிரதமரின் கூற்று ஆதாரமற்றது என்பது நிரூபணமாகி உள்ளது. முன்னதாக காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையைப் போலவே, காலிஸ்தான் ஆதரவாளர் ரிபுதமன் சிங் மாலிக் கொலைக்கும் இந்தியாதான் காரணம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ரிபுதாமன் சிங் மாலிக் கொலையில் தொடர்புடைய இரு குற்றவாளிகளும் கனடா நீதிமன்றத்தில் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கனடா பிரதமரின் பொய் அம்பலமாகி உள்ளதாக கூறுகின்றனர்.

இந்நிலையில் ரிபுதமன் சிங் மாலிக் கொலை வழக்கில் வரும் அக்டோபர் 31ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செய்திகள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, ​​குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் ஆஜராக, இருவரின் வயதைக் காரணம் காட்டி குறைந்த தண்டனை வழங்குமாறு முறையிட்டார். அதே சமயம், ரிபுதமன் சிங் மாலிக்கின் குடும்பத்தினர், குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இப்போது எங்களுக்கு நீதி கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தனர்.

The post இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் கனடா பிரதமரின் மற்றொரு பொய் அம்பலமானது appeared first on Dinakaran.

Tags : India ,New Delhi ,Ributhaman Singh ,Canada ,Prime Minister of ,
× RELATED இரு தரப்பு ஒப்பந்தத்தின் படி அணுசக்தி...