வயநாடு: வயநாடு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நவம்பா் 13ம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதில் பிரியங்கா காந்தி முதல் முறையாக களம் காண்கிறாா். கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுவை தாக்கல் செய்ய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேரணியாக செல்கிறார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு மத்தியில், பிரியங்கா காந்தியுடன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாட்டின் முன்னாள் எம்.பி.யுமான ராகுல் காந்தியும் பேரணியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில், வயநாட்டில் நடைபெற்று வரும் காங்கிரஸ் பரப்புரை கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது; வயநாடு மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும், 17 வயதில் எனது தந்தை ராஜிவ் காந்திக்காக தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். தேர்தலின்போது 35 ஆண்டுகளாக பல முறை கட்சி நிர்வாகிகளுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளேன். எனது தாய், தந்தை, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுக்காகவும் பிரச்சாரம் செய்துள்ளேன். தற்போது எனக்காக தேர்தல் பரப்புரை செய்யவும், வேட்பு மனு தாக்கல் செய்யவும் வயநாடு வந்துள்ளேன். மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் சாதி , மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். வயநாடு நிலச்சரிவின்போது மன உறுதியுடன் இருந்த மக்களை பார்த்து நெகிழ்ந்தேன் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
இதையடுத்து வாகன அணிவகுப்புக்கு பின்னர் பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் இருந்தனர். வயநாடு இடைத்தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நவ்யா ஹரிதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகின்றனர்.
The post இப்போது எனக்காக பரப்புரை செய்கிறேன்.. உங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு தாருங்கள்: பிரியங்கா காந்தி உரை!! appeared first on Dinakaran.